“இயக்கத்துக்காக இயக்கமாகவே வாழும் மாமனிதர் நல்லகண்ணு” – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

20 0

“இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு. அவருக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நல்லகண்ணு குறித்த ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: நூற்றாண்டு விழா நாயகராக இருக்கக்கூடிய நல்லகண்ணுவின் புகழை, சிறப்பை, அவர் தியாகத்தை இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறோம். சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம்! உங்கள் வாழ்த்தைவிட எங்களுக்குப் பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்துவிட போவதுமில்லை.

பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது.100 வயதைக் கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ்ச் சமுதாயத்துக்காக இன்னும் உழைக்கத் தயாராக இருக்கிறேன் என்றும், உள்ள உறுதியோடு இங்கே அமர்ந்திருக்கக்கூடிய அவருக்கு கம்பீரமான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பீரமான வணக்கம் மட்டுமல்ல, கம்பீரமான செவ்வணக்கத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லகண்ணுவின் 80-ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கெடுத்துக் கொண்டு வாழ்த்திய கலைஞர் கருணாநிதி, “வயதால் எனக்குத் தம்பி; அனுபவத்தால் எனக்கு அண்ணன்”, “என்னைவிட வயதால் இளையவர், ஆனால், அனுபவத்தாலும், தியாகத்தாலும் நம்மையெல்லாம் விட மூத்தவர்” என்று குறிப்பிட்டார். “நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோமே அதுதான் பெருமை”.

அவர் தாய் காவியம் தீட்டியபோது, அதற்கு நல்லகண்ணுவிடம்தான் அணிந்துரை வாங்கினார். அப்படிப்பட்ட தோழமையை இறுதி வரை பேணிப் பாதுகாத்தார். அந்த நட்புணர்வுடன் தான், கொள்கை உறவோடு தான் இன்றைக்கு நான் உங்களை வாழ்த்தவும் – வாழ்த்துப் பெறவும் வந்திருக்கிறேன்!

நல்லகண்ணுவுக்கு, அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கினார் கலைஞர். நான் 2022-இல் தகைசால் தமிழர் விருதை வழங்கினேன், இதுதான் எனக்கு கிடைத்த பெருமை!

அண்ணல் அம்பேத்கர் விருதை பெறும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதில் ஐம்பதாயிரத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இன்னொரு ஐம்பதாயிரத்தை விவசாய சங்கத்திற்கும் கொடுத்துவிட்டார்.

இப்போது நான், தகைசால் தமிழர் விருது கொடுத்தபோது, அப்போது 10 லட்சம் ரூபாயை தந்தோம். அந்த 10 இலட்ச ரூபாயை மட்டுமல்ல, அதனுடன் 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து, பத்து லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தார்.

அவரின் 80-ஆவது பிறந்தநாளின்போது, அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், பொருளாளர் எம்.எஸ்.தாவீதும், ஒரு கோடி ரூபாயைத் திரட்டித் தந்தார்கள். அந்த ஒரு கோடி ரூபாயையும் மேடையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே கொடுத்துவிட்டார். அதே மேடையில், கார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தக் காரையும் இயக்கத்திற்காக கொடுத்துவிட்டார்.

இவ்வாறு, இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல், இயக்கத்திற்காகவே, இயக்கமாவே வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய மாமனிதரை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா?

கட்சிக்காகவே உழைத்தார்! உழைப்பால் வந்த பணத்தையெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். அதனால்தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்! எப்படிப்பட்ட வரலாறு அவருடையது…? நினைத்துப் பார்க்கிறேன்.

1925-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது! அதே ஆண்டு அதே மாதத்தில் 26-ஆம் நாள் நல்லகண்ணு பிறக்கிறார். அந்த வகையில், ஒரு இயக்கமும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது; அந்த இயக்கத்தின் மாபெரும் தலைவரும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்.

திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்குமான அரசியல் நட்பு இடையிடையே விடுபட்டிருக்கலாம். ஆனால், கொள்கை நட்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தொடரும். அது தொடரக்கூடியது.

இரண்டு இயக்கங்களுக்குமான நட்பு என்பது, கொள்கை நட்பு! தேர்தல் அரசியலைத் தாண்டியது இந்த நட்பு! சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மைவாதம், எதேச்சாதிகாரம், மேலாதிக்கம் ஆகிய அனைத்திற்கும் எதிராக, ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவதுதான் அவருக்கு நாம் வழங்கும் நூற்றாண்டு விழா பரிசாக அமைந்திட முடியும்!

அத்தகைய ஒற்றுமையையும், ஒரே சிந்தனையும் கொண்டு, அவரின் வழித்தடத்தில் நாமும் நடப்போம். நூற்றாண்டு கண்டுவிட்ட தோழர் நல்லகண்ணு இன்னும் பல்லாண்டுகள் வாழ்க! வாழ்க! எங்களை வழிநடத்துக! என்று கேட்டு, என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.