உலகே மாந்தநேயம் இழந்தாயே!-மா.பு.பாஸ்கரன் – யேர்மனி.

69 0

அன்பின் மொழியில் பேசுங்கள்
ஆண்டவன் மொழியில் சிந்தியுங்கள்
என்று கூறிடும் மேற்கும் கிழக்கும்
உன் வசதிக்கேற்ப நியாயங்களை
நினைத்தவாறு வளைத்தபடி
நீள்வளமாகக் கிடப்பதுமேன்?

காஸா மனித வேட்டையை
வேடிக்கைபார்க்கின்ற சிந்தனையை
மாற்றிடும் போக்கைக் காண்பாயா
மூன்று வாரமேயான குழந்தை சிலா(SILA)
குளிரில் வாடியே இறந்ததை அறியாது
மருத்துவமனைக்கு கொண்டு போனதும்
மரணம் பற்றி அறிந்து கொண்டதும்
தாயின் மனதையும்; தந்தையின் நிலையையும்
விபரிக்க வார்த்தைகள் ஏதும் உண்டா?

உலகுக்கென்ன ஆறாந்தலைமுறை
ஆயுதங்களுக்கான ஆய்வுகளில்
அற்புதமான அழிவா யுதங்களை
படைப்பதற்கான தேடல்களில்
மாந்தநேயம் இழந்த உலகில்
மனிதம் அழிந்த உலகினிலே
கொடுமைத்தனமான ஆயுதங்கள்
குவியல் குவியலாய்
தேடுவாரற்றுக் கிடக்கும் ஒருநாள்
அன்று நீயும் தேடுவாரற்றுபோவாய்தானே

உலகே நீயும் இன்றேனும் சிந்திப்பாயா
எதுவும் அறியா மழலைகளும் குழந்தைகளும்
என்ன கெடுதல் செய்தார் உங்களுக்கு
ஏனின்னும் இரக்கம் எழவில்லை மனதில்
மாந்தநேயத்தை மண்ணுள் புதைத்து
பக்கச்சார்பாகப் பேசிடும் போக்கை
மாற்றிடும்போதே மனிதம் தோன்றிடும்
மாந்தநேயத்தை உலகம் காணும்!

மா.பு.பாஸ்கரன் – யேர்மனி