நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி பட்டம் சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் 8 உத்தியோகத்தர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தொடர்பில் சமூகத்தின் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தனது கலாநிதி பட்டத்துக்கான சான்றிதழ்களை வெளிப்படுத்த தவறிய பட்சத்தில் அசோக்க ரன்வல்ல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார்.
இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயவிபரக் கோவை பகுதியில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னாள் கலாநிதி என்று பதிவிடப்பட்டு, பின்னர் அந்த கலாநிதி பதிவு நீக்கப்பட்டமை குறித்து அரசியல் களத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை சுயவிபரக் கோவையில் பதிவிடும்போது தவறுதலாக கலாநிதி என்று பதிவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றம் குறிப்பிட்டு, இதனால் நீதி அமைச்சருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு கவலையடைவதாக பாராளுமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இவ்விடயம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த 16ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த முறைப்பாட்டுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சென்று, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட 6 அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் இரண்டு உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு, 3 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் 8 உத்தியோகத்தர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.