விரைந்து நகரும் காலவோட்டத்தில் 2024ஆம் ஆண்டு எம்மிடம் விடைபெற 2025ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் நாம் வாழும் நாட்டோடு இணைந்து புத்தாண்டை வரவேற்கும் வகையில் நந்தினி அரங்கிலே ‘புத்தாண்டே வருக ‘ எனும் கலைமாலை நிகழ்வை லண்டவையும், அதனைச் சூழவுள்ள நகரங்களில் வாழும் தமிழ் உறவுகளின் ஒருங்கிணைந்த பங்களிப்போடு கடந்த 21.12.2024ஆம் நாள் சனிக்கிழமையன்று லண்டவ் – குயெஸெல்கைம் நகரில் நடாத்தியது.
18:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய கலைமாலை நிகழ்வு நடனங்கள், பாடல்கள், நாடகம், பட்டிமன்றம் எனப் பல்சுவைக் கதம்பமாகச் சிறப்பாக நடைபெற்றது. பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க் நகரிலிருந்து எழுச்சி நடனங்களோடு, லண்டவ் மற்றும் ஸ்ராஸ்பேர்க் கலைஞர்கள் இணைந்து வழங்கிய ‘யாரிடம் சொல்வோம்’ என்ற நாடகம் சிந்தனையை தூண்டுவதாக அமைந்ததோடு, தாயக வாழ்வா? வாழிட வாழ்வா? சிறந்தது என்ற பட்டிமன்றமும் இடம்பெற்றது. லண்டவ் மற்றும் நொயிஸ்ரட் வாழ் இளையோரின் நிகழ்வுகளும் இணைந்து நிகழ்வைச் சிறப்பித்தது.