வவுனியாவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது

23 0
வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவரை உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் இரு இயந்திரங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் வவுனியா நகர், பூவரசங்குளம், நெடுங்கேனி, ஒமந்தை, கனகராயன்குளம் போன்ற பல பொலிஸ் பிரிவுகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் கத்தி முனையை காட்டி பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான நபர் வீட்டில் தங்குவது இல்லை என்பதுடன் வனப்பகுதிகளிலேயே தங்குவது வழமையாக கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் 43 மற்றும் 30 வயதுடையவர்கள் என்பதுடன்  கைது செய்யப்பட்ட பிரதான நபருக்கு எதிராக நீதிமன்றில் நான்கு திறந்த பிடியானை மற்றும் ஆறு திகதியிடப்பட்ட பிடியானை என்பன வழங்கப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.