கல்லடி Bridge Market தீக்கிரை

16 0

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக காணப்பட்ட இச்சந்தையில் சுமார் 12 வருடங்களாக 30 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மரக்கரி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற மேலும் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த நிலையிலேயே இந்நாசகார செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு குறித்த நாசகார செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், மனநலம் பாதிக்கப்பட்டவராக சொல்லப்படும் நபரொருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்து சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக குறித்த சந்தைக்கு அருகாமையில் பொலிஸ் காவலரணில் இருந்த பொலிஸாரின் கடமை நிறுத்தப்பட்டதன் பின்னர் குறித்த பகுதியில் குற்றச் செயல்களும், போதைப்பொருள் பாவனையாளர்களின் நடமாட்டமும் அதிகரித்திருந்ததாக அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்