முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்த போது ஸ்ரீலங்காவில் சட்டம் சீராக தன் கடமையை செய்தது என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன புகழாரம் கூறியுள்ளார்.
பொலிஸார் சரியாத முறையில் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை எனத் தெரிவித்த அவர் இதுதொடர்பாக நேற்று புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார்.
கொழும்பு உட்பட மேல்மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் பாதயாத்திரைகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாகக் கூறியே கெமுனு விஜேரட்ன இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர், போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி, மேல்மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இந்த முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டை செய்த கெமுனு விஜேரட்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது, மனித உரிமைகள் ஆணைக்குழு தனது முறைப்பாட்டை உரிய முறையில் முன்னெடுக்காத பட்சத்தில் பொலிஸாருக்கு எதிரான உச்ச நீதிமன்றிலும் மனுத்தாக்கல் செய்ய நேரிடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.