மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டுக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இன்று (21) மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு இணைந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மூன்று மாவீரர்களின் தாய்மாரை மாவீரர் நாளன்று பொதுச்சுடர் ஏற்றுவதற்கு அழைத்துவரப்பட்ட பின்னர், அவமதித்து வெளியே அனுப்பிய சம்பவம் தொடர்பாக இதன்போது பேசப்பட்டது.
இனி வரும் காலங்களில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுதல், மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடின்றி மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்பது மற்றும் மூன்று மாவீரர்களின் தாய்மாரை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போது அவர், எதிர்வரும் காலத்தில் மாவீரர் நினைவேந்தல்களை தாம் பொறுப்பேற்று செய்வதாகவும் அதற்கேற்றவாறு தாம் நிர்வாகங்களை தெரிவு செய்து இனிவரும் காலங்களில் அரசியல் தலைவர்கள் இன்றி, முன்னாள் போராளிகள் தலைமைதாங்கி மாவீரர் நினைவேந்தலை நடத்தவுள்ளதாகவும் அதற்கு முன்னாயத்த கூட்டமாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் யாரும் இந்த நிர்வாகத்தை எதிர்த்து செயற்பட்டால், அவற்றுக்கு முகங்கொடுத்து எமது பணிகளை திறம்பட நிறைவேற்றுவோம் எனவும் திட்டவட்டமாக கூறினார்.