புதிய அரசாங்கம் குறிப்பிட்ட எந்த விடயமும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை

14 0

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம்பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை.

ஜனாதிபதி இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை அரசியலமைப்பில் இருந்தும் கூட அவை அமுல்படுத்தப்படவில்லை.

தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்பு என்பது “பழைய மொந்தையிலே புதிய கள்” போன்று இருக்குமே தவிர எவ்வித தீர்வும் கொண்டதாக இருக்கப்போவதில்லை.

முதல் தடவையாக இனவாதத்தை கொண்டிருக்கக்கூடிய ஒரு அரசு பதவி ஏற்றிருக்கிறது. இவ்வாறு மிகப்பெரும் வெற்றி பெற்றும் கூட அவர்களது சிந்தனையில் பாரிய மாற்றம் இல்லை. ஒற்றை ஆட்சியை வைத்துக்கொண்டு தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல செயற்பட்டு வருகிறார்கள்.

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுய நிர்ணய உரிமையை முன்வைப்பதற்கான கோரிக்கையை அரசாங்கத்துக்கு முன்வைக்க வேண்டும். பல உயிர் தியாகங்களை செய்த பின்பும் நாம் பிரிந்து செயற்பட முடியாது. எனவே அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுவதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

இதற்கு புலம்பெயர்ந்தவர்களும் ஈழத்தில் இருக்கக்கூடிய அத்தனை தமிழ்த் தேசிய அணியினரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

2013ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு கோரிக்கை முன்வைத்து அதனை உறுதியுடன் செயல்படுத்தி இருந்தார். அதே கோரிக்கையோடு தான் தற்போது விஜய்யினுடைய கட்சியும் முன்னோக்கி செல்கிறது.

அதேபோல தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒரே கோரிக்கையுடன் பயணிப்போமாக இருந்தால் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 75 ஆண்டுகளை தாண்டியும்  தற்போதும் தலைமைத்துவம் இல்லாத நிலையில் இலங்கை நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமையே காணப்படுகிறது. எனவே அவர்கள் சமஸ்டியை கைவிட்டு ஒரு கூட்டு சமஸ்டி ஊடாக அனைவரையும் உள்வாங்கி முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம்  கேட்டுக்கொண்டார்.

அத்துடன் ஜனாதிபதியின் இந்திய பயணம் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.