சிதம்பரம் நகரத்துக்குள் ‘நீர்வழி ஆக்கிரமிப்பு’ காரணமாக வீடுகளை இழந்த 800 பேர், மாற்று இடம் கேட்டு நடையாக நடந்து வருகின்றனர். சிதம்பரம் நகரத்துக்கு உட்பட்ட தில்லையம்மன் கோயில் தெரு, தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, அண்ணா தெரு, அம்பேத்கர் நகர், பாலமான் பகுதி, நேரு நகர், ஈ.பி இறக்கம், கோவிந்தசாமி தெரு, குமரன் தெரு, மந்தகரைபகுதி, ஓமக்குளம், வாகிசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சில பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்த மக்களின் குடிசை வீடுகள், மாடி வீடுகள் ‘நீர்வழி ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியின் போது நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டது. தொடர்ந்து, திமுக ஆட்சியிலும் சில வீடுகள் இடிக்கப்பட்டன.
இந்தப் பகுதியில் குடியிருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அடித்தட்டு மக்கள். வீடு இடிக்கப்பட்டதால் பல குடும்பத்தினர் வாடகை வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இன்னும் பலர் திடீரென ஏற்பட்ட இந்த இழப்பால், வாடகை கூட கொடுக்க முடியாமல், வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். வாடகை கொடுத்து குடியிருக்க முடியாதவர்களில் சிலர், தற்போது வரையிலும் பாலமான் வாய்க்கால் அருகே உள்ள மேம்பாலத்துக்கு கீழே உடமைகளை திறந்தவெளியில் வைத்துக்கொண்டு, சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
7 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக, திமுக என இரு ஆட்சி நிர்வாகத்திலும் இப்பகுதி மக்கள் தங்களுக்கு புதிய இடத்தில் வீட்டு மனைப்பட்டா தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினருடன் இணைந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்துக்கு வரும் அதிகாரிகள், அந்த நேரத்தில் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்வதும், அவர்கள் மீண்டும் ஆதங்கத்துடன் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்தப் போராட்டங்களின் முக்கிய பகுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம், சிதம்பரம் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் குடியேறும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இதில், வீடுகளை இழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தால் ஒருவித நெருக்கடிக்கு தள்ளப்பட்ட நிலையில், “மாற்று இடத்துக்கான குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு, 3 மாதங்களில் வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் கூறுகையில், “மாற்று இடம் தருகிறோம் என்று கூறியே வீடுகளை இடித்தனர். நாங்கள் வீடுகளை இழந்து அகதிபோல நிற்கிறோம். தினமும் வேலைக்கு போனால்தான் எங்கள் வீட்டில் உள்ளவர்களின் வயிறு நிறையும். அன்றாட வேலை, அது சார்ந்த விஷயங்களே பெரும் போராட்டமாக இருக்கிறது.
இந்தச் சூழலில் தற்போது வசிக்கும் வீட்டுக்கு வாடகை அளித்து வருகிறோம். இதற்கு மத்தியில் புதிய மனையை பெற நடத்தப்படும் அலைக்கழிப்பு எங்களை மேலும் மனச்சோர்வுக்கு ஆளாக்கி வருகிறது. ‘தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடு கட்டி கொடுக்கப்படும்’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு போராட்டத்தின் போதும், இப்படி எதையாவது கூறி, அந்த நேரத்தில் வாயடைத்து விடுகிறார்கள். 7 வருடங்களுக்கும் மேலாக இப்படியே இழுத்தடித்து வருகிறார்கள்” என்று தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர்.
இப்போது வந்து இவ்வளவு அதிரடியாக நடடிவக்கை எடுக்கும் இந்த அதிகாரிகள்தான், இந்தப் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் வீடுகளைக் கட்டி குடியிருக்க அனுமதி அளித்து விட்டு, அதற்கு முறையான சான்றுகள் வழங்கியிருக்கின்றனர். மேலும் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை வழங்கி, உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் வரி வசூலும் செய்து, குறிப்பிட்ட முகவரியின் கீழ் குடிமைப் பொருள் அட்டைகளை வழங்கியிருக்கின்றனர். இவ்வாறாக இந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கத்தில் இருந்தும் அங்கீகரித்து வந்துள்ளனர்.
தொடக்கத்திலேயே ஒன்றிரண்டு குடியிருப்புகள் வரவும், ‘இது, நீர்நிலை வழித்தடப் பகுதி’ என்று எச்சரித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது. குடியிருக்கும் வீடு என்பது பலரது உயிர்ப்புடன் கலந்தது. அதற்காக பட்ட சிரமங்கள், பெற்ற கடன்கள் என ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சொல்ல ஏராளமான கதைகள் உண்டு.
இப்படியான பல கதைகளுடன் சிதம்பரம் நகரில் 800 குடும்பத்தினர் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். இவர்களில் 600 பேர் மிகமிக எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது இவர்கள் கேட்பது மாற்று இடம் மட்டுமே. இதை காலம் தாழ்த்தாமல் தர வேண்டும் என்பதே இவர்கள் இறைஞ்சி கேட்கும் கோரிக்கையாக உள்ளது.