அரசியலமைப்பு அமுலாக்கம், மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் மற்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்தல் எனும் விடயங்கள் இலங்கையும், இந்தியாவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்வாங்கப்படவில்லை.
இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள் சார்பில் கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை அந்நாட்டுப்பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கிறது.
அதனடிப்படையிலேயே அவரால் அக்கருத்துக்கள் வெளியிடப்பட்டன எனச் சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் உள்ளடங்கியிருப்பதனால் அவ்விடயத்தை கூட்டறிக்கையில் உள்வாங்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது விசேடமாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து என்ன பேசப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அத்தோடு அவ்விருதரப்பு சந்திப்பை அடுத்து இலங்கையும், இந்தியாவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து எந்தவொரு விடயமும் உள்வாங்கப்பட்டிருக்காத நிலையில், அவ்விடயத்தை உள்வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கவில்லை என வெளியான தகவல்களின் உண்மைத்தன்மை தொடர்பிலும் அமைச்சரிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித்த ஹேரத், அக்கூட்டறிக்கையில் அதனை உள்வாங்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். ‘நாம் எமது நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகவே செயற்படுவோம். எமது அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் உள்வாங்கப்பட்டிருக்கிறது. எனவே அதுகுறித்து புதிதாகக் கலந்துரையாடவேண்டிய அவசியமோ அல்லது கூட்டறிக்கையில் உள்ளடக்கவேண்டிய அவசியமோ இல்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு ‘எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடாத்தப்படும். அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறோம். உள்ளுராட்சிமன்றத்தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச்செய்து, மீண்டும் புதிதாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படக்கூடிய விதத்தில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.
தற்போது அதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஜனவரிமாதத் தொடக்கத்தில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம். அதனைத்தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் தினத்தில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் நடாத்தப்படும்’ எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்தவேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததன் விளைவாக மாகாணசபைத்தேர்தலை நடாத்தவேண்டிய முறை தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
‘ஆகையினால் பாராளுமன்றத்தின் ஊடாக அச்சட்டத்தை மீண்டும் திருத்தியமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. எனவே அப்பணிகள் பூர்த்தியடைந்தவுடன் அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதன் காரணமாகவே கூட்டறிக்கையில் இவ்விடயத்தை உள்ளடக்கவேண்டிய தேவை யாருக்கும் ஏற்படவில்லை’ எனவும் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அதனையடுத்து ‘அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துமாறும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார். அரசியலமைப்பு அமுலாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்கள் என்பன எமது நாட்டின் உள்ளக விவகாரங்களாகும்.
இதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? அதேபோன்று அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யவேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். அரசாங்கம் நாட்டுமக்களின் அபிலாஷைகளை ஈடேற்றவேண்டுமே தவிர, அதனை இனக்குழும அடிப்படையில் நோக்கமுடியாது. ஆகவே இவ்விடயத்திலும் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன?’ என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலிறுத்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், ‘நீங்கள் கூறுகின்ற விடயம் இலங்கை – இந்திய கூட்டறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. இந்தியப்பிரதமருக்கு அந்நாட்டு அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் கருத்து வெளியிடுவதற்கான உரிமை இருக்கிறது. அதன்பிரகாரம் தான் அவர் தனது கருத்தை வெளியிட்டார்.
இருப்பினும் எமக்கு இடையில் எட்டப்பட்ட இருதரப்பு இணக்கப்பாடுகள் தொடர்பான கூட்டறிக்கையில் அவ்வாறானதொரு விடயம் குறிப்பிடப்படவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படாது. நாம் இப்போது எமது நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகவே செயற்படுகின்றோம்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது இலக்காக இருக்கிறது. அதுபற்றி நாம் எம்முடைய கொள்கைப்பிரகடனத்திலும் குறிப்பிட்டிருந்தோம். எனவே எதிர்வருங்காலங்களில் விசேடமாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இலக்காகக்கொண்டு, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்களின் சரத்துக்களை உள்வாங்கக்கூடியவாறான புதிய அரசியலமைப்பைத் தயாரித்து, அதற்கு நாட்டுமக்களின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் பயணித்து வருகின்றோம். இதுவே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு’ என்றார்.