எட்கா உள்ளிட்ட சில ஒப்பந்தங்களை ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் செய்யும்போது எதிர்ப்பு தெரிவித்து வந்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதனால் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தம், இலங்கை இந்திய எரிபொருள் வேலைத்திட்டம், நாகபட்டத்துக்கான கப்பல் சேவை, துறைமுக அபிவிருத்தி திட்டத்தை அதானி நிறுவனத்துடன் இணைந்துகொள்ளல் போன்ற இணக்கப்பாடுகளுக்கு செல்ல முற்பட்டபோது அதற்கு மக்கள் விடுதலை முன்னணியே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தேர்தலின்போதும் இந்த விடயங்களுக்கு எதிராகவே இவர்கள் பிரசாரம் செய்து வந்தனர்.
ஆனால் கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இதன்போது எட்கா உள்ளிட்ட இந்த வேலைத்திட்டங்கள் அனைத்துக்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவே தெரியவருகிறது.
அதனால் இந்தியாவுடன் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதேநேரம் எட்கா தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
மேலும் அரசாங்கம் முதலாவது அமைச்சரவையின் அதானி நிறுவனத்துக்கு கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு வழங்குவதை நிறுத்தியது. தற்போது அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?.
அதேபோன்று நாகப்பட்டனத்துக்கான கப்பல் சேவை, இலங்கை இந்திய எரிபொருள் வேலைத்திட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தற்பாேதைய நிலைப்பாடு என்ன என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதேவேளை, அரசாங்கம் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மறக்கடிக்கச்செய்தும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் வேறு விடயங்களை மேற்கொண்டு வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச்செய்வதாக தெரிவித்தார்கள்.
ஆனால் இதுவரை அது தொடர்பில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகமை தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டு மக்களின் பிரச்சினையை மறந்துள்ளது.
உழைக்கும்போது செலுத்தும் சுமார் 3 இலட்சம் பேரின் வரியை குறைப்பதாக, வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வரும் 12 மில்லியன் மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. அதாவது, வங்கிகளில் நிறுத்தி வைக்கும் பணத்துக்கு இதுவரை 5ஆயிரம் ரூபாவாக இருந்த வரியை 10ஆயிரமாக அதிகரித்துள்ளது.
அந்த 5ஆயிரம் ரூபா அனைவருக்கும் விதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்டதொரு தொகைக்கு அதிகமாக வைத்திருப்பவர்களுக்கே விதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது நிறுத்திவைக்கும் வரி வங்கிகளுடன் கொடுக்கல் வாக்கலில் ஈடுபடும் அனைவருக்கும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசாங்கம் சாதாரண மக்களின் சேமிப்பிலும் கை வைத்துள்ளது என்றார்.