‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தால் 2 கோடி பேர் பயன்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

14 0

தமிழக அரசின் ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்​டத்​தால் 2 கோடி பேர் பயனடைந்​துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறினார்.

தமிழக அரசின் சுகா​தாரத் துறை சார்​பில் செயல்​படுத்​தப்​படும் ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்டம் 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இந்த திட்டத்​தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்​தம், இயன்​முறை சிகிச்சை, டயாலிஸிஸ் என்று தொற்றா நோய்​களில் பாதிக்​கப்​பட்​டோரின் வீடு​களுக்கே சென்று சிகிச்சை அளித்து, மருந்து வழங்​கப்​படு​கிறது. திட்​டத்​தில் பயனடைந்​தோர் எண்ணிக்கை 2 கோடியை தொட்​டுள்​ளது.

ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கிராமத்​தைச் சேர்ந்த சுந்​த​ராம்​பாள் (55) என்பவர் இத்திட்​டத்​தின் இரண்டு கோடி​யாவது பயனாளி​யா​வார். 2 நாள் பயணமாக ஈரோட்டுக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்​டா​லின், நஞ்சனாபுரம் சென்று சுந்​த​ராம்​பாளை சந்தித்து, மருந்​துப் பெட்​டகத்தை வழங்கி நலம் விசா​ரித்​தார். தொடர்ந்து, தொடர் சிகிச்​சை​யில் உள்ள வசந்தா (60) என்பவரை சந்தித்த முதல்​வர், அவருக்​கும் மருந்​துப் பெட்​டகம் வழங்​கினார். அப்போது, அமைச்​சர்கள் மா.சுப்​பிரமணி​யன், சு.முத்​துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்​டோர் உடனிருந்​தனர்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்​பிரமணியன் கூறும்​போது, “மக்​களைத் தேடி மருத்​துவம் திட்டம் மூலம் 2 கோடி பேரும், தொடர் சேவை என்ற வகையில் 4.29 கோடி பேரும் பயனடைந்​துள்ளனர். மக்களைத் தேடி மருத்​துவம் திட்​டத்​தில் 14,000-க்​கும் மேற்​பட்​டோர் பணிபுரி​கின்​றனர். கடந்த அதிமுக ஆட்சி​யில் மக்கள் பயன்​பாடு இல்லாத பகுதி​களில் 1,700 இடங்​களில் அம்மா கிளினிக் தொடங்​கப்​பட்​டது. ஓராண்டு ஒப்பந்த அடிப்​படை​யில் தொடங்​கப்​பட்ட இந்த திட்டம் முடிவுக்கு வந்து​விட்​டது. இந்த திட்​டத்​தால் மக்களுக்​குப் பயனில்லை.

அதே நேரத்​தில் திமுக ஆட்சி​யில் கொண்டு வரப்​பட்ட மக்களைத் தேடி மருத்​துவம் திட்​டத்​தைப் பாராட்டி ஐ.நா. சபை விருதுவழங்​கி​யுள்​ளது” என்றார். முதல்வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலைதளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதிவில், “நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்​களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்​ப​தில் புதுப் புரட்சி, ஐ.நா. அமைப்​பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதிவரும் ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்​டத்​தின் இரண்டு கோடி​யாவது பயனாளிக்கு மருந்​துப் பெட்​டகங்களை வழங்​கினேன்.

மருத்​துவ​மனைகளை நாடிச் செல்​லவோ, வீட்டுக்கு மருத்​துவர்களை வரவழைக்கவோ வசதி​யில்லாத எண்ணற்​றோருக்கு வீடு தேடிச் சென்று ‘பிசி​யோதெரபி’ அளித்து வாழ்​வில் ஒளியேற்றும் சாதனையை​யும் சப்தமின்​றிப் படைத்து வரும் இத்திட்​டத்​தின் வெற்றிக்​குக் காரணமான 14 ஆயிரம் மருத்​துவப் பணியாளர்​களுக்கு நன்றி” என்று தெரி​வித்​துள்ளார்.