இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை

11 0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு சிங்கள மக்களுக்கு ஒன்றையும், இந்தியாவுக்கு பிறிதொன்றையும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தேசபற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம்  குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறுகிய அரசியல் தேவைக்காக மக்கள் விடுதலை முன்னணி தனது அடிப்படை கொள்கைகளை மாற்றியுள்ளமை கவலைக்குரியது.1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது மக்கள் விடுதலை முன்னணி  கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. இவர்களின் போராட்டம் பிற்காலத்தில் நாட்டில் இனக்கலவரம் தோற்றம் பெறுவதற்கு ஒரு காரணியாக அமைந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி சிங்கள மக்களிடம் ஒன்றையும், இந்தியாவுக்கு பிறிதொன்றையும் குறிப்பிடுகிறார். 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை தொடர்பில் நாட்டு மக்களிடம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் உண்டு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை முறையான அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு சென்று ஒப்புதல் அளித்துள்ளார். எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கிய உத்தரவாதம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தேசபற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம். எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் ஏற்படும் விளைவுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்போம் என்றார்.