பலஸ்தீன மக்களைக் கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீரர் இலங்கையில் இருக்கிறார்

25 0

பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், உயிரிழந்தோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூறவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் என்பவர் கொழும்பில் இருப்பதாகவும், அவரைக் கைதுசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ‘தி ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்’ வலியுறுத்தியுள்ளது.

‘த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்’ என்பது இஸ்ரேலின் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதுடன், காஸாவில் கொல்லப்பட்ட சகலரையும் நினைவுகூரும் நோக்கில் பெல்ஜியத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பாகும்.

குறித்த அமைப்பானது பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், அவ்வாறு கொல்லப்பட்டோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூறவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் என்பவர் கொழும்பில் இருப்பதாக தமக்கு அறியக்கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி அவரை உடனடியாகக் கைதுசெய்வதற்கும், இவ்விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவ்வமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்திருக்கும் ‘த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்’, குறித்த இராணுவ வீரருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பை வெளியிடுவது பற்றி இன்டர்போலுடனும் கலந்துரையாடியுள்ளது.