அமரர் திரு. பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை (சூரி)
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,சுழிபுரம், தமிழீழம்
வதிவிடம்: ராவன்ஸ்பூர்க், யேர்மனி..( Ravensburg, Germany)
இயற்கையின் படைப்பில் மானிடம் ஒரு அரிய படைப்பாகக் கருதப்படுகின்றது.அத்தகைய உன்னதமான மானிடப்படைப்பின் இயல்புகளில் சுதந்திர உணர்வு மேலோங்கி நிற்பது மானிடத்தின் உயர்வுக்கு ஆணிவேராக அமைந்துள்ளது. ஒரு தனிமனிதன் முதல், ஓர் தேசம்வரை சுதந்திர வேட்கையின் உச்சத்தைத் தொடுவதே இலக்காகக் கொண்டுள்ளது என்பது உண்மையின் தரிசனமாகும். இதன் இயற்கை வெளிப்பாடாகவே தமிழீழச் சுதந்திரப் போர் தோற்றம் பெற்றது. தமிழீழப் போரில் ஏற்பட்ட இனவெறி அழிப்பின் காரணமாகப் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் தாங்கள் வாழ்ந்த நாடுகளில் தமது தேச உணர்வைக் காட்டி நின்ற ஆரம்பகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தேச விடுதலைச் செயற்பாட்டை விரிவுபடுத்தி விடுதலைப் போரைப் பலப்படுத்த ஏற்பட்ட புலம்பெயர் நாடுகளின் கட்டமைப்பில் செயலாற்ற பலர் முன்வந்தனர். அன்றைய காலகட்டத்தில் இருந்த புறச்சூழல் பல நெருக்கடிகளைப் புலம் பெயர்ந்தவர்களுக்கு ஏற்படுத்திய காலம், ஒரு நகரைவிட்டு வேறு நகரம் செல்ல அனுமதியில்லை, வதிவிட அனுமதிகாலம் வரையறுக்கப்பட்ட நேரம், இறுக்கமான சட்ட வரைவுகள், இப்படியான காலகட்டத்தில் தேச உணர்வோடு முன்வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ராவன்ஸ்பூர்க் நகரச் செயற்பாட்டாளராக தன்னை இணைத்துக் கொண்டவர் அமரர் பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள்.
“சூரி அண்ணன்”என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அன்பு நிறைந்த பிறவி. ஆரம்பகாலச் செயற்பாட்டின் முனைப்பாக அயல் நகரப் பிரதிநிதிகளைத் தன்னுடன் இணைத்து கட்டமைப்பின் கட்டுப்பாட்டு விதிகளின் மரபுகளை மனதில் ஏற்றி தனது செயற்பாட்டை முன்னெடுத்த செயற்பாட்டாளராவார். யேர்மனியின் ஆரம்பகாலப் பொறுப்பாளர்களாக இருந்த உதா அண்ணன்,சுதா அண்ணன் காலத்தில் இருந்தே தனது செயற்பாட்டை ஆரம்பித்த முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமரர் பாலசூரியகுமார் அவர்கள் தேசவிடுதலைக்காக யேர்மனியில் சிறப்பாகச் செயற்பட்டதற்காக 2004 ஆம் ஆண்டு “அனைத்துலகச் செயலகம் தமிழீழம்” சார்பாக யேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட பதக்கம் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டார்.
அத்தோடு யேர்மனியில் பிறந்து வரும் பிள்ளைகளின் தமிழ்க்கல்வி, கலாச்சார விழுமியங்களை ஊக்கிவிப்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக யேர்மனியில் தமிழாலயங்களை ஆரம்பித்தபோது ராவன்ஸ்பூர்க் நகரத்தில் தமிழாலயத்தை ஆரம்பித்து சிறந்த பணியாளர்களையும், ஆசிரியர்களையும் நியமித்து சிறப்பாக நடாத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமரர் பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள் நோயுற்ற காரணத்தால் சாவடந்தமை கண்டு நாம் வேதனை கொள்கின்றோம். அன்னாரின் பிரிவுத் துயர் சுமந்து நிற்கும் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தோழமை உறவுகளோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து, அவரது ஆத்மா அமைதிபெற இயற்கையை வேண்டி, அவர் நினைவோடு எம் இலட்சியப் பயணங்களை தொடர்வோமென உறுதி கொள்கின்றோம்.
“தேசப் பற்றில் ஆழ்ந்த மாந்தர்
தேச வானில் வீற்றிருப்பர்”
அமரர் திரு. பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை (சூரி) அவருடைய இறுதிவணக்க நிகழ்வு 23.12.2024 திங்கட்கிழமை 11.00 மணியில் இருந்து 15.00 மணிவரை கிழே உள்ள முகவரியில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
Stadt Lindau,Friedhofverwaltung Krematorium
Friedhof Aeschach,Ludwig-Kick Str.49 88131 Lindau,Germany