சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் திடீர் சுகயீனம் : விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்பு

11 0

ப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களில் 7 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் துரிதமாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் 7 மாணவர்கள் கடந்த 17ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மூலம் வழங்கப்பட்ட  தடுப்பூசி காரணமாக திடீர் சுகயீனத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த மாணவர்கள் பெலிஉல்ஓய மற்றும் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 மாணவியர்களும் ஒரு மாணவரும் இவ்வாறு திடீர் சுகயீனத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் காலாவதியாகி இரண்டு மாதங்களான தடுப்பூசிகள் இவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பல்கலைக்கழக மாணவர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் 6 மாணவிகள் மற்றும் ஒரு மாணவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாக சுகயீனமுற்ற நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மூலம்  காலாவதியாகி இரண்டு மாதங்களான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பல சிக்கல்கள் நிலவிவருவதுடன் ஏற்கனவே இவ்வாறான சிக்கல்களால் ஒரு பேராசிரியரும், இரு மாணவர்களும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என்றார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தகவலறிந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர், சப்ரகமுவ விவசாய பீடத்தின் பீடாதிபதி, பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலை அத்தியட்சகர் ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் உடல் நிலை தொடர்பில் கேட்டறிந்துகொள்ளுமாறும் உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

மேலும், இது தொடர்பில் ஆராய்ந்து துரிதமாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.