சென்னை ஐசிஎஃப்-க்கு தேசிய எரிசக்தி சேமிப்பு விருது

14 0

 வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய எரிசக்தி சேமிப்பு தின நிகழ்ச்சி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வந்தே பாரத் ரயில் தயாரிப்பின் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் மனோகர் லால், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் ஆகியோரிடம் இந்த விருதை ஐசிஎஃப் முதன்மை தலைமை மின் பொறியாளர் சி.ஆர்.ஹரிஷ் பெற்றுக் கொண்டார்.

உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் எவ்வித சமரசம் இன்றி, மின் நுகர்வை குறைக்க முயற்சி எடுக்கும் தொழில்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக தேசிய எரிசக்தி சேமிப்பு விருது வழங்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக, மின் சிக்கனம் இடம்பெற்றுள்ளதால், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் டிச.14-ம் தேதி கொண்டாடப்படும் தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தில் மத்திய அரசின் முக்கிய பிரமுகர்களால் இந்த விருது வழங்கப்படுகிறது.