ஒரே நேரத்தில் 555 பேருக்கு வர்ம சிகிச்சை அளித்து தேசிய சித்த மருத்துவமனை கின்னஸ் சாதனை

18 0

 ஒரே நேரத்தில் 555 வர்ம சிகிச்சை நிபுணர்களை கொண்டு 555 பேருக்கு வர்ம சிகிச்சை அளித்து தேசிய சித்த மருத்துவமனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சித்த மருத்துவத்தின் வர்மமருத்துவ சிறப்புகளை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன்படி, நேற்று மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 555 வர்மானிகளை (வர்ம சிகிச்சை நிபுணர்கள்) கொண்டு 555 பேருக்கு தற்காப்பு வர்ம மருத்துவப் பரிகாரத்தை வழங்கி சாதனை படைத்துள்ளது. கின்னஸ் நிறுவன பிரதிநிதி ரிச்சர்ட் வில்லியம், கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கினார்.

மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை நிகழ்வில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொட்டேசா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மருத்துவ நிறுவனத்தின் டீன் மருத்துவர் எம். மீனாட்சி சுந்தரம், கண்காணிப்பாளர் மருத்துவர் கிறிஸ்டியன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது: இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவமானது, சித்தர்களின் நுட்பமான, தனித்துவமான மேம்பட்ட பாரம்பரிய மருத்துவமாகும். சித்த மருத்துவத்தின் தனித்துவமான முறைகளாக விளங்கக்கூடிய காயகற்பம், வர்மம், தொக்கணம் போன்றவை அதன் மகத்துவத்தையும், தொன்மையையும் பறை சாற்றுகின்றன. சித்த மருத்துவத்தில் உடனடித் தீர்வாக பயன்படுத்தப்பட்ட ஓர்அற்புதமான மருத்துவ முறைதான் வர்மம்.

வர்மக்கலை அடிமுறை தாக்குதலுக்கான பயிற்சியாக அறியப்பட்டாலும், தீவிர நிலை நோய்களுக்கான சிகிச்சை முறையாக சித்த மருத்துவத்தில் அறிவியல் பின்புலத்தோடு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மருந்தில்லா மருத்துவ வழிமுறையாக, வலிகளுக்கான மருத்துவமாக இது பெரும் பங்கை வகிக்கிறது.

மூளை, நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களான பக்கவாதம், முடக்கு வாதம் முதலான நோய்களுக்கும், எலும்பு சதை. மூட்டு சார்ந்த நோய்களுக்கும், வர்மம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் தென் கோடியில் உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே பழக்கத்தில் உள்ள இந்த வர்ம மருத்துவ முறையானது உலக மக்கள் அனைவருக்கும் பயன் அளிக்கக் கூடிய வகையில் வளர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.