வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

16 0

2024-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாகித்ய அகாடமி விருதுகள் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் 20 இந்திய மொழிகளுக்காக அறிவிக்கப்பட்ட விருதுகளில், தமிழ் மொழிக்கான விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், திருநெல்வேலி எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு வ.உ.சி.யின் மொத்த சுதந்திர போராட்டத்தை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 1967-ல் பிறந்த இவர், புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவற்றில் பணியாற்றியுள்ளார். பாரதியின் இந்திய கருத்துப் படங்கள், பாரதியும் வ.உ.சி.யும் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். உவேசா, புதுமைப்பித்தன் உள்ளிட்டோர் குறித்தும் எழுதியுள்ளார்.

விருது குறித்து ஆ.இரா.வேங்கடாசலபதி கூறும்போது, “நான் வரலாற்று ஆய்வாளராக மாறியதற்கு வ.உ.சி. தான் காரணம். அவரை பற்றி எழுதிய நூலுக்காக விருது கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நூலுக்கு ஆய்வறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உதவினர். அவர்களுக்கு நன்றி” என்றார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.