வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகளை புனரமைப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை விடுவிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளையும் விரைவாக புனரமைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தையும், அதேபோல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைப்பதாக அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் எந்தவொரு பொருட்களின் விலைகளும் குறைக்கப்படவில்லை. மாறாக அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மின்சார கட்டணத்தை எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு குறைக்க முடியாது என்று இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ள நிலையில் 11 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டத்தின் ஊடாகவே மின்கட்டணத்தை குறைக்க முடியும். ஆகவே புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டத்தை நடுத்தர மக்கள் மத்தியில் அமுல்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின் அலகுகளுக்கு உரிய கட்டணத்தை வழங்க வேண்டும்.
சமீபத்தில் நிலவிய மழையுடனான காலநிலையால் கிழக்கு மாகாணம் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு உள்ளானது. பெரும்பாலான பாடசாலைகள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை புனரமைக்க மாகாண கல்வி அமைச்சு திணைக்களத்திடம் வலியுறுத்திய போதும் நிதி இல்லை என்று குறிப்பிடப்படுகிறது.
ஆகவே, பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை புனரமைக்க போதுமான நிதியை மாகாண கல்வி அமைச்சுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.