அன்டிஜன், பீ.சீஆர். கொள்வனவு செய்த நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைசெய்து மோசடிகாரர்களை வெளிப்படுத்துவோம்

10 0

கொவிட் தொற்று காலப்பகுதியான 2019 முதல் 2022 காலப்பகுதியில் என்டிஜன் மற்றும் பீசீஆர். தொகுதிகளை கொள்வனவு செய்வதில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அதிக என்டிஜன் கொள்வனவு செய்த நிறுவனம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் பதிவு  செய்யப்படாத நறுவனமாகும்.

அதனால் இந்த காலப்பகுதியில் என்டிஜன் மற்றும் பீ.சீஆர். கொள்வனவு செய்த நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொண்டு மோசடிகாரர்களை வெளிப்படுத்துவோம் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளி்கையில்,

2019 முதல் 2022 வரை இலங்கையில் கொவிட் 19 தொற்று பரிசோதனைகளின்போது, என்டிஜன் பரிசோதனை அரச துறைகளின் மூலம் 21இலட்சத்தி 97ஆயிரத்தி 318 பரிசோதனைகளும் தனியார் துறைகளின் மூலம் 6இலட்சத்தி 18ஆயிரத்தி 538 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பீ.சீஆர்.பரிசோதனை அரச துறைகளின் மூலம் 40இலட்சத்தி 41ஆயிரத்தி 124 பரிசோதனைகளும் தனியார் துறை மூலம் 26இலட்சத்தி 41ஆயிரத்தி 326 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் என்டிஜன் மற்றும் பீசீஆர். தொகுதிகளை கொள்வனவு செய்வதற்கு 26 நிறுவனங்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அதில் 7 நிறுவனங்களில் இருந்தே என்டிஜன் மற்றும் பீசீஆர். தொகுதிகளை அரசாங்கம் கொள்வனவு செய்திருக்கிறது.

அதில் 2,2 பில்லியன் ரூபாவுக்கு அதிக என்டிஜன் தொகுதிகளை கொள்வனவு செய்துள்ள திவச ச.ம. கொழும்பு நிறுவனம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் பதிவுசெய்யப்படாத நிறுவனமாகும்.

அதேபோன்று உலக சந்தையின் விலையைவிட அதிக விலைக்கு  தடுப்பூசி கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையின் பின்னர் மோசடிகாரர்கள் தொடர்பில் இந்த சபைக்கு வெளிப்படுத்துவேன் என்றார்.