கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை தகனம் செய்ய எடுத்த தீர்மானம் சுகாதார அமைச்சினால் எடுத்த தீர்மானம் என வைத்தியர் அனில் ஜயசிங்கவே அன்று தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து வெட்கப்படுவதாக தெரிவிக்கும் சுகாதார அமைச்சர், எவ்வாறு அனில் ஜயசிங்கவை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்க முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்பினார்.
விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்கவை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்திருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்த போதும் அதனை பின்பற்றாமல் கடந்த அரசாங்கம் பலவந்தமாக தகனம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.
அந்த தீர்மானத்தை எடுத்தது அரசியல் அதிகாரசபை. ஆனால் அரசியல் அதிகாரசபையின் தீர்மானத்தை வெளிப்படுத்தியது வைத்தியர்கள், அரச அதிகாரிகள்.
இந்த பிரச்சினை இருக்கும்போது அன்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக இருந்த வைத்தியர் அனில் ஜயசிங்கவை சந்தித்து எமது பாராளுமன்ற குழு கலந்துரையாடியது.
இதன்போது கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை தகனம் செய்ய எடுத்துள்ள தீர்மானம் குறித்து நான் அவரிடம் கேட்டபோது, இது அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் அல்ல. சுகாதார அமைச்சினால் எடுத்த தீர்மானம் என தெரிவித்து அவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அவ்வாறான அதிகாரியை தற்போது சுகாதார அமைச்சின் செயலாளராக எவ்வாறு நியமித்துக்கொள்ள முடியும். கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் குறித்து நாடு என்றவகையில் வெட்கப்படவேண்டும் என நீங்களே தெரிவித்துவிட்டு, வெட்கப்படும் வகையிலான தீர்மானம் எடுத்த அதிகாரி உங்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது முறையா என கேட்கிறேன்.
அதற்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளிக்கையில், அன்று கொவிட் தொடர்பில் தீர்மானம் மேறகொள்ள அமைக்கப்பட்ட குழு எவ்வாறு அமைக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியும்.
அரசியல் அதிகாரிகளே அதில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருந்து அரசியல் நிலைமையில் அரசியல் அதிகாரசபை எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்தவேண்டிய நிலையே வைத்தியர்களுக்கு இருந்தது.
அதனை மீறி செயற்பட முடியாது. என்றாலும் அந்த வைத்தியர்கள் தொற்று நிலைமை தொடர்பில் விஞ்ஞான ரீதியான கருத்துக்களை குழுக்களில் தெரிவித்துள்ளனர்.
அரசியல் மேலிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே அன்று வைத்தியர்கள் செயற்பட்டனர் என்றார்.