இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி ஜனாதிபதி எதனையும் குறிப்பிடவில்லை. பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாடசாலை மாணவர்களின் கல்வி கற்றலுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்து ஆளும் தரப்பினர்களில் பெரும்பாலானோர் இலவச கல்வியின் ஊடாகவே கல்வி கற்றுள்ளார்கள். முன்னேற்றமடைந்துள்ளார்கள் என்று குறிப்பிட வேண்டும்.
வறுமையின் காரணமாக எந்தவொரு பிள்ளையும் பாடசாலை கல்வியை கைவிட கூடாது என்று குறிப்பிட்டு ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசாங்கம் இலவச பாடநூல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதேபோல் பாடசாலையில் பல்வேறு நிறங்களுடனான ஆடையில் மாணவர்கள் கல்வி கற்கும் போது மாணவர்களின் மத்தியில் வேற்றுமை தோற்றம் பெறும் ஆகவே மாணவர்கள் அனைவரும் சமமாக நோக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இலவச பாடசாலை சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
ஆகவே கடந்த கால அரசாங்கங்கள் நாட்டுக்கு ஏதும் செய்யவில்லை என்று குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொய்யுரைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன். இலவச கல்வி திட்டத்தில் 41 இலட்சம் மாணவர்கள் உள்ளடங்குகிறார்கள். இவர்களில் 10 இலட்சம் மாணவர்களுக்கு மாத்திரம் 6000 ரூபா நிவாரணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொருளாதார பாதிப்பின் பின்னர் 56 சதவீதமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 25 சதவீதமான மாணவர்களின் கல்வி கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் மத்தியில் வேறுபாடுகளை தோற்றுவிக்காமல் 41 இலட்ச மாணவர்களுக்கும் 6000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏழ்மையில் உள்ளவர்களை தெரிவு செய்வதற்கு தோல்வியடைந்த அஸ்வெசும முறைமை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைமை ஊடாகவே பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபா நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு அமைய தெரிவுகள் இடம்பெற்றால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அரச சேவையாளர்கள் மென்மேலும் பாதிக்கப்படுவார்கள்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியம் பற்றி சபையில் உரையாற்றினார். ஆனால் இந்திய விஜயம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் காலங்களில் எட்கா ஒப்பந்தத்துக்கு எதிராகவே செயற்பட்டார். இந்த ஒப்பந்ததின் உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தவில்லை. அனைத்து சிறந்த வெளிநாட்டு திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.