அமைச்சரவை அமைச்சர்களின் கல்வித் தகைமையை பகிரங்கப்படுத்துங்கள்

9 0

எதிர்க்கட்சியின் உறுப்பினர் அஜித் பி. பெரேரா உயர் சட்டத்தரணி என்ற பதத்தை பயன்படுத்துவது சட்டவிரோதமானது இலங்கை நீதி கட்டமைப்பில் அவ்வாறானதொரு பதவி கிடையாது என நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார குறிப்பிட்ட கருத்துக்கு அஜித் பி.பெரேரா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இல்லாத கலாநிதி பட்டத்தை பயன்படுத்தியவர்கள் உண்மை வெளிப்படும் என்ற அச்சத்தில் பாராளுமன்றத்துக்கு அறிவித்து விட்டு சுயவிபரக் கோவையில் இருந்து கலாநிதி பட்டத்தை நீக்கியுள்ளார்கள். இவர்களின் செயற்பாடு வெட்ககேடானது என அஜித் பி. பெரேரா கடுமையாக சாடியதை தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் தர்க்கம் நிலவியுள்ளது.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18)  நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா,

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (17)  நான் இல்லாத சந்தர்ப்பத்தில் நீதியமைச்சர் எனது கல்வித் தகைமை பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்கத்தின் பிரகாரம் நான் ஆலோசனை சட்டத்தரணியாக செயற்படுகிறேன். ஆகவே கவுன்சில் சட்டத்தரணியாக நான் சேவையாற்றுகிறேன். கவுன்சில் சட்டத்தரணி என்ற அடிப்படையில் உயர் சட்டத்தரணி என்று குறிப்பிட முடியும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அஜித் பி, பெரேரா உயர் சட்டத்தரணி என்ற பட்டத்தை எங்கு பெற்றார். அவ்வாறு பெற்ற பட்டத்தை சபைக்கு சமர்ப்பிக்குமாறு மாத்திரமே வலியுறுத்தினேன் என்றார்.

மீண்டும் உரையாற்றிய அஜித் பி. பெரேரா இந்த மனிதருக்கு நான் தெளிவாக குறிப்பிட்டேன், நான் கவுன்சில் சட்டத்தரணி என்று இவருக்கு சிங்களம் தெரியாதா என்றார். நீதியமைச்சர் 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தான் உயர் சட்டத்தரணி ஆகவே தனக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்துள்ளார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நீதியமைச்சர், நான் பொய்யுரைக்கவில்லை. இவருக்கு பதிலளித்து அவரை பெருமைப்படுத்த விரும்பவில்லை என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய அஜித். பி. பெரேரா, இங்கிலாந்து கல்வி புலமையை இங்கு பயன்படுத்த முடியாது என்று குறிப்பிடுவதையிட்டு நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டும். பெயருக்கு முன்பாக கலாநிதி என்று பயன்படுத்தி விட்டு பின்னர் அச்சமடைந்து உண்மை வெளிப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு அறிவித்து கலாநிதி பட்டத்தை நீக்கி விட்டு வெட்கமில்லாமல் பேசுகிறார் என்று கடுமையாக சாடினார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்தரப்பினருக்குமிடையில் கடும் தர்க்கம் நிலவியது. அனைவரும் உரையாற்றுவதற்கு அனுமதி கோரிய போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி குழுக்களின் தலைவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இதன்போது எழுந்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, 25 ஆண்டுகாலம் சட்டத்தரணியாக சேவையாற்றியுள்ளேன். இலங்கையின் நீதி கட்டமைப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் சட்டத்தரணி என்று இருவேறு பிரிவுகள் மாத்திரமே உள்ளது. எதிர்க்கட்சியின் உறுப்பினர் அஜித் பி. பெரேரா குறிப்பிடுவதை போன்று ‘ உயர் சட்டத்தரணி’ என்ற பதவி கிடையாது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார முன்னாள் சபாநாயகர் அசோக்க ரன்வல எதிர்க்கட்சியின் உறுப்பினர் என்று நினைத்துக் கொண்டு ஆளும் தரப்பினர் பேசுகிறார்கள். அமைச்சரவை உறுப்பினர்களின் கல்வித் தகைமையும் சந்தேகத்துக்கிடமாக உள்ளது . எதிர்க்கட்சித் தலைவர் கல்வித் தகைமையை பகிரங்கப்படுத்தியதை போன்று கல்வித் தகைமையை முடிந்தால் பகிரங்கப்படுத்துங்கள் என்றார்.