தேசிய மருத்துவ துறையை மேம்படுத்த மூன்று பிரிவுகளின் கீழ் விசேட வேலைத்திட்டம்

8 0

தேசிய மருத்துவ துறையை பிரதான மூன்று பிரிவுகளின் கீழ் மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன் இதன் மூலம் சுற்றுலாத் துறையின் பங்களிப்புடன் 8,500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈடுவதற்கும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்ட அமைச்சர் அங்கிருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தற்போது நடைமுறையில் உள்ள ஆயுர்வேத மருத்துவ முறையை மேம்படுத்துவதற்க்கான வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.

மேற்கேத்தேய, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, ஓமியோபதி மற்றும் பாரம்பரிய மருத்துவத்தையும் ஒருங்கிணைத்து மருத்துவ சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பரிசோதனை மட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர்வர்வதை இலக்காகக் கொண்டு ஆயுர்வேத வைத்திய முறையை ஸ்தாபிக்க வேண்டும்.

தேசிய மருத்துவத் துறையை பிரதான மூன்று பிரிவுகளின் கீழ் மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் ஒழுங்கமைக்கப்பட உள்ளது.

சுகாதார சேவையில் தற்போது 1,164 அரச வைத்தியசாலைகளும், ஆயுர்வேத பிரிவில் 112 வைத்தியசாலைகளும் இயங்கி வருகின்றன.

இந்த வைத்தியசாலைகள் ஒவ்வொன்றிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி அவற்றைக் மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்.

உள்ளூர் மருத்துவ முறையை மேம்படுத்துவதும், மருத்துவ முறையின் தனிச்சிறப்புகளை கண்டறிந்து அவற்றை சுற்றுலாத் துறையுடன் இணைப்பதும் அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும்.

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதுடன், அடுத்த வருடத்திற்குள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை சென்றடைவதே அரசாங்கத்தின் மிக பெரிய எதிர்பார்ப்பாகும்.

இதன் மூலம் 8500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மருத்துவத் துறையின் சிறப்புகளை பயன்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.