ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தாமதமின்றி நடைமுறைப்படுத்துங்கள்

19 0

ஜனாதிபதி அநுரகுமார தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தினை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த நிலையில் அவர் அங்கு வழங்கிய வாக்குறுதிமொழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டு பத்திரிகையாளர் மாநாடு குறித்தும் அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பிலும் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இந்தியா சென்று வந்துள்ளார். ஜனாதிபதி அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சி ஆரம்பத்திலிருந்து இந்திய எதிர்ப்பு வாதத்தை தனது கட்சியின் கொள்கையாகக் கொண்டிருந்தது.

இப்பொழுது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஆட்சி அமைத்திருக்கக்கூடிய அனுர அரசாங்கமானது தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ளக்கூடிய அளவிற்கு பூகோள பிராந்திய அரசியல் சூழல் உருவாகியுள்ளது.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபொழுது அதில் இரண்டு ஷரத்துகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பானது. இரண்டாவது இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகமான எந்தவொரு புற சக்திகளினதும் இடமாக இலங்கை இருக்கக்கூடாது என்பது.

அந்த வகையில் இப்பொழுது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் இந்த இரண்டு விடயங்களும் மீண்டும் உறுதிபடப் பேசப்பட்டிருக்கின்றது. இந்தியாவினது பாதுகாப்பென்பது இலங்கையின் பாதுகாப்புடன் இணைந்தது என்பதை இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

அதனை ஏற்றுக்கொண்ட இலங்கை ஜனாதிபதி அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகமான எந்தவொரு விடயமும் இலங்கை மண்ணிலிருந்து அனுமதிக்க மாட்டோம் என்பதை தெளிவுபடக்கூறியிருக்கின்றார். அதேபோன்று இந்தியப் பிரதமர் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் நல்லுறவை பலப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு முக்கியமாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதைப் போல் அரசியல் யாப்பை முழுமையாக நிறைவேற்றி மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும்படியும் கோரியுள்ளார்.

இந்திய அரசாங்கம் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் தங்களது அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தொடர்ந்தும் அக்கறையாக இருக்கின்றார்கள் என்பதை அவரது பேச்சுவார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அந்த முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கின்றது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறுபட்ட முக்கியமான விடயங்கள் பேசப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது. மின்சாரம், எரிபொருள் போன்றவற்றை கடல்நீருக்கடியினூடாக கொண்டுவருவதற்கான கொள்கை முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.

திருகோணமலை சம்பூரில் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குவதற்கும் இராமேஸ்வரம் தலைமன்னார் படகுச் சேவைக்கும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி இலங்கையில் மின்சக்தி உற்பத்திக்குத் தேவையான திரவ எரிவாயு வினியோகம் போன்ற பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு முடிவுகளும் எட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் இருதரப்பு உறவுகளுக்கு வலுச்சேர்த்துள்ள நிலையிலும் அரசியல் சாசனத்தை முழுமையாக நிறைவேற்றி மாகாணசபைத் தேர்தல்களை விரைந்து நடத்தும்படி இந்தியா வலியுறுத்தியுள்ள சூழ்நிலையிலும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய பரப்பில் களமாடும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இலங்கை தனது அரசியல் சாசனத்தை முழுமையாக நிறைவேற்றி மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்தும்படி இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படியும் மாகாணசபைத் தேர்தல்களை விரைந்து நடத்தும்படியும் இந்திய அரசாங்கம் கோரிவந்தது.

அதுமாத்திரமல்லாமல் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திலும் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தும்படி கூறிவந்துள்ளது.  இப்பொழுது பதின்மூன்றாவது திருத்தம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இலங்கையின் அரசியல் சாசனத்தை முழுமையாக நிறைவேற்றி மாகாணசபைத் தேர்தல்களை விரைந்து நடத்துமாறு கோரியிருப்பது என்பது இலங்கை அரசுடன் ஒரு சுமுகமான நல்லுறவை மேற்கொள்வதற்கான இந்தியாவின் ஒரு முயற்சியாகவே தோன்றுகின்றது.

இந்த நிலையில் எமது நீண்டகால நோக்கென்பது சமஷ்டியாகவோ அல்லது அதற்கு அப்பாற்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில், தமிழ் மக்களது இருப்பைப் பாதுகாக்கவும் அவர்களின் பிரதேசங்களைப் பாதுகாக்கவும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மாகாணசகைக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதென்பது மிகமிக முக்கியமானது.

விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில்ல போன்றவர்களும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்ற தோரணையில் மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று பேசுகின்றனர். ஜே.வி.பியும் புதிய அரசியல் சாசனம் வரும்பொழுது பதின்மூன்றாவது திருத்தம் இல்லாமல் செய்யப்படும் என்று கூறுகின்றார்கள்.

அதற்குப் பதிலாக தமிழ் மக்களுக்கான தீர்வு எவ்வாறு இருக்கும் என்பதைக் குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும் இது ஒற்றையாட்சிக்கு உட்பட்டது. இதனால் பிரயோசனம் இல்லை. ஆகவே அது நிராகரிக்கப்பட வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கின்றார்கள்.

சிங்கள இனவாத சக்திகள் பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. தமிழ் மக்களை அடிமைகளாக நடாத்தவே விரும்புகின்றார்கள். ஆனால் ஆரம்பத்திலிருந்தே இந்தியா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட தீர்வினை நடைமுறைப்படுத்தும்படி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

ஆகவே இன்றைய காலகட்டத்தில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியம் இல்லை என்றும் எனவே அதனை நிராகரிக்கின்றோம் என்றும் கருத்துகளை தெரிவிப்பதை விடுத்து, புதிய அரசியல் சாசனம் ஒன்றில் நாங்கள் கேட்கின்ற சமஷ்டி கோரிக்கை உள்வாங்கப்படும் வரையில் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதை அனைத்து தமிழ் கட்சிகளும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.