யாழில் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

15 0

நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (18) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, கடந்தகால கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டுக்கு மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், சரியான முறையில் கணக்காய்வு விடயங்களை முகாமை செய்யும்போது ஐய வினாக்களைத் தவிர்க்கலாம் எனவும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடைமுறை ரீதியில் சமூக நலன் கருதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக சில முடிவுகளை தற்துணிவுடன் எடுப்பதனால் சில இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் சுனில் ஜெயசேகர நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாக கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் கணக்காய்வாளர் அத்தியட்சகர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.