ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவின் மலைப்பகுதியான குடவுரி என்ற இடத்தில் சொகுசு விடுதி உள்ளது. இதில் இந்திய உணவுகளை பரிமாறும் உணவகம் உள்ளது. இதில் வடஇந்திய தொழிலாளர்கள் 12 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறைகளில் தங்கியிருந்தனர்.இந்நிலையில் இவர்கள் தங்கள் அறைகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடலில் காயம் எதுவும் இல்லை. அவர்களின் படுக்கை அறைகளுக்கு அருகிலேயே மூடிய பகுதிக்குள் ஜெனரேட்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதும் ஜெனரேட்டர் தானாக இயங்கியது. அப்போது கார்பன் மோனாக்சைடு விஷவாயு வெளியாகி இவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் காரணத்தை துல்லியமாக உறுதிசெய்ய தடயவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுகிறது.
உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு திபிசிலியில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைந்து அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய உறுதிபூண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் இறந்த 12 பேரும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் ஆஜ்லா கூறியுள்ளார்.
கார்பன் மோனாக்சைடு விஷம்: எரிபொருள் எரிக்கப்படும்போது கார்பன் மோனாக்சைடு விஷவாயு வெளியாகிறது. இது உயிருக்கு ஆபத்தானது.
இது நிறமற்றது மற்றும் மணமற்றது என்பதால் இதனை கண்டுபிடிப்பது கடினம். இதனை அதிக அளவில் உள்ளிழுத்தால், ஆக்சிஜனை உடல் பயன்படுத்துவதை தடுத்து, மூளை, இதயம் மற்றும் பிற உறுப்புகளை பாதிக்கச் செய்கிறது. தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், குமட்டல் மற்றும் வாந்தி, விரைவான இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும். மேலும் சுயநினைவை இழக்கச் செய்யும்.
சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கச் செய்வதே இதற்கான சிகிச்சையாகும். கடுமையான பாதிப்புக்கு ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை அவசியம். இந்த சிகிச்சை ஒரு சிறப்பு அறையில் செய்யப்படுகிறது. அங்கு நோயாளி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இயல்பை விட 2 முதல் 3 மடங்கு அதிக அழுத்தத்தில் சுத்தமான ஆக்சிஜனை சுவாசிப்பார்.
கார்பன் மோனாக்சைடு வாயுவை நீண்ட நேரம் சுவாசிப்பது மூளை மற்றும் இதயத்தை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யும். நரம்பியல் பிரச்சினைகள், கோமா அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தும்.