கொடுங்​கையூரில் குப்பை எரிவுலை திட்​டத்தை கைவிட வேண்​டும்: சமூக அமைப்புகள் கோரிக்கை

14 0

சென்னை கொடுங்கையூரில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ள குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி, எரிவுலையற்ற சென்னைக்கான கூட்டமைப்பு சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

பின்னர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஜியோ டாமின், விஸ்வஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகராட்சி திடக்கழிவுகளைக் கையாள, சென்னை மாநகராட்சி ஒவ்வொரு நாளும் 2,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் உருவாக்க குப்பை எரிவுலையை வடசென்னையில் நிறுவ முடிவு செய்துள்ளது.

இந்த குப்பை எரிவுலைகள் மிகவும் அபாயகரமான சாம்பல் கழிவுகளையும், நச்சு வாயுக்களையும் உருவாக்குபவை ஆகும். இதுபோன்ற எரிவுலைகள் இந்தியாவில் எங்கெல்லாம் நிறுவப்பட்டதோ, அங்கெல்லாம் தோல்வி அடைந்துள்ளன.

குறிப்பாக டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபடுதலுக்கும், பரவும் நோய்களுக்கும் காரணமாக எரிவுலைகள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழின் புலனாய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. ஏற்கெனவே வடசென்னையில் பெட்ரோல், ரசாயன தொழிற்சாலைகள், அனல் மின் நிலையம் போன்ற 36 சிவப்பு பட்டியல் தொழிற்சாலைகள் உள்ளன. நகரின் மிகப்பெரிய குப்பைக் கிடங்கும் இங்குதான் உள்ளது.

இந்த பகுதியில் அமைக்கப்படும் எரிவுலையானது ஒரு நாளைக்கு 3,570 டன் கரியமில வாயுவை உமிழக்கூடியது. இது 10.50 லட்சம் கார்களில் இருந்து ஒரே நாளில் வெளியேறும் உமிழ்வுக்கு ஒப்பானது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சினைகள், ஆஸ்துமா, தலைவலி, தோல் பிரச்சினைகள், புற்றுநோய், கருச்சிதைவுகள், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிப்புகள் போன்றவற்றையும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. சென்னையை ‘கார்பன் நியூட்ரல்’ ஆக மாற்றும் முயற்சிக்கு இத்திட்டம் எந்த விதத்திலும் உதவாது.

எனவே சென்னை கொடுங்கையூரில் முன்மொழியப்பட்டுள்ள குப்பை எரியூட்டி ஆலையை அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசும், மாநகராட்சியும் கைவிட வேண்டும். மாறாக திறம்பட்ட கழிவு மேலாண்மையை மாநகராட்சி செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.