அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: விரைந்து தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

35 0

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து பெங்களூரு வா.புகழேந்தி அளித்துள்ள மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்தும், அதிமுக பெயர் மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவது குறித்து தான் அளித்துள்ள மனுவை விரைவாக பரிசீலிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சேர்ந்த வா.புகழேந்தி, ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக மனுதாரர் வா.புகழேந்தி மீண்டும் புதிதாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் மனுவை தேர்தல் ஆணையம் சட்டத்துக்குட்பட்டு விரைவாக பரிசீலிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி புதிதாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புகழேந்தி தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி மனோஜ் ஜெயின் முன்பாக நடந்தது. அப்போது புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக் வேணு, ‘‘இந்த விவகாரத்தில் பலமுறை நினைவூட்டும் மனுக்கள் அளித்தும் தேர்தல் ஆணையம் 6 மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.

அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வரும் டிச.24-ம் தேதி நேரில் ஆஜராகும்படி மனுதாரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் அளித்துள்ள மனுக்கள் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ‘‘இந்த வழக்கில் தங்களை எதிர்மனுதாரராக சேர்க்கவி்ல்லை. கட்சிக்கு சம்பந்தமில்லாத புகழேந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏற்கக்கூடாது’’ என்றார்.

அதையேற்க மறுத்த நீதிபதி மனோஜ் ஜெயின், ‘‘இந்த வழக்கு மனுதாரரான புகழேந்திக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நடக்கும் வழக்கு. டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி அவர் ஆணையத்துக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்’’ என்றார். பி்ன்னர் புகழேந்தி அளித்துள்ள மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளார்.