தமிழைவிட வேறு எந்த மொழிக்கும் அதிக வரலாறு கிடையாது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

28 0

காலத்துக்கு ஏற்ப மொழி முன்னேற வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையின் தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரி சார்பில் கணித்தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

‘செயற்கை நுண்ணறிவும் கலைகளும்’ என்ற தலைப்பில் முனைவர் மதன் கார்க்கி பேசும்போது, ‘‘“ஒரு கலையின் முக்கியமான பணி உணர்வை கடத்துவதுதான். சிற்பங்கள், ஓவியங்கள் நம்மிடம் பேச வேண்டும். பாடல்கள் நம்முடன் கலந்திட வேண்டும். இதெல்லாம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டால், அதே உணர்வை நமக்கு தருமா? இதில் சரி எது, தவறு எது என்பதில்லை. ஆனால் அந்த கேள்வி அவசியம். எதிர்காலத்தில் கருவிகளுடன் நாம் போட்டிபோடப் போகிறோம். அதற்கு தயாராகி கொள்ள வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கணித்தமிழ் மின் இதழை வெளியிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தில் தமிழில் என்ன செய்தால், தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டு பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

அதன் ஒருபகுதியாக இந்த சொற்பொழிவு நடத்தப்படுகிறது. எந்த ஒரு கலாச்சாரத்துக்கும் மொழி என்பது உச்சகட்ட அடையாளம் ஆகும். நம் அனைவரின் ரத்தத்திலும் நம் தாய்மொழி கலந்திருக்கும். உலக மொழிகளில் தமிழைவிட வேறு எந்த மொழிக்கும் அதிக வரலாறு கிடையாது.

அந்த அளவுக்கு பழமையும், பெருமையும் இருந்தாலும்கூட காலத்துக்கு ஏற்ப மொழி முன்னேறினால்தான் அதன் வளர்ச்சி நீடிக்கும். உலக பொருளாதாரத்தின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அதன்படி வளரும் தொழில்நுட்பத்தில் மொழியின் அடையாளமும், பயனும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நாமும் முன்னேற வேண்டும்.

இதையொட்டி தமிழக அரசால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகின்றன. அதில் இணையவழி கல்விக் கழகம் முக்கிய பங்காற்றுகிறது.

குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் டிஜிட்டல் நூலகம், செல்போன் செயலிகள் போன்றவற்றை உருவாக்கியிருக்கிறது. அடுத்தகட்டமாக செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்களை கொடுப்பதற்காக தமிழில் தரவு அமைப்புகளையும் உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இயக்குநர் சே.ரா.காந்தி, எத்திராஜ் மகளிர் கல்லூரி தலைவர் வி.எம்.முரளிதரன், முதல்வர் எஸ்.உமா கவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.