2025 செப்டெம்பருக்குள் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையைப் பூர்த்திசெய்வது சாத்தியமில்லை

8 0

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு ஆணை அளிக்கப்பட்டிருக்கும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்வது சாத்தியமற்றது என சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ், எனவே அவசியமேற்படின் இலங்கை குறித்த தீர்மானத்தை மேலும் காலநீடிப்பு செய்வது பற்றி இணையனுசரணை நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தவேண்டியிருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்சுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு  திங்கட்கிழமை (16)  கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அண்மையில் ஆட்சிபீடமேறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் மற்றும் தற்போது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி ஐ.நா வதிவிடப்பிரதிநிதி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.

குறிப்பாக ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு வட, கிழக்கு மாகாணங்களில் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், இன்னமும் உரிமையாளர்களிடம் மீளக்கையளிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பான விபரங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை, புலனாய்வாளர்களின் கண்காணிப்பு என்பன பற்றி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் விசேடமாகக் கேட்டறிந்துகொண்டார்.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டம் ‘முற்றாக நீக்கப்படும்’ என தேர்தல் பிரசாரங்களின்போது வாக்குறுதியளித்திருந்த தேசிய மக்கள் சக்தி, தற்போது அதிலிருந்து பின்வாங்கி, பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் ‘திருத்தியமைப்பதாகக்’ கூறிவருவதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டிய தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், இதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தனர்.

அதுமாத்திரமன்றி அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு (10 ஆம் திகதி) சர்வஜன நீதி அமைப்பினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், உடனடியாக அவதானம் செலுத்தப்படவேண்டும் எனத் தம்மால் வலியுறுத்தப்பட்ட மனித உரிமைகள்சார் கரிசனைகள் பற்றியும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சிடம் எடுத்துரைத்தனர்.

அதேபோன்று கடந்த செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கிறது.

அத்தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் (இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது) தற்போதைய நிலைவரம் மற்றும் அதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவுசெய்வதற்கான சாத்தியப்பாடு என்பன பற்றி ஐ.நா வதவிடப்பிரதிநிதியிடம் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ், ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையை செப்டெம்பர் மாதத்துக்குள் நிறைவுசெய்வது சாத்தியமில்லை என்றும், அவ்வாறு முடிவுறுத்தமுடியாவிடின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை மேலும் காலநீடிப்பு செய்வது குறித்து இணையனுசரணை நாடுகளுடன் கலந்துரையாடவேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி ஆரம்பத்தில் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கிய அமெரிக்காவிலும், தற்போது தலைமைத்துவத்தை வழங்கிவரும் பிரிட்டனிலும் அண்மையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கும் நிலையில், அந்நாடுகளின் பிரதிநிதிகளுடன் இதுபற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் இதன்போது வலியுறுத்தினார்.