13 ஆம் திருத்தத்தை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் வலியுறுத்தலை வரவேற்கிறோம்

22 0

அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியினால் வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனுள் 13 ஆவது திருத்தமும் உள்ளடங்குவதனால் அவ்வலியுறுத்தலை தாம் வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இருப்பினும் அவற்றை கூட்டறிக்கையில் உள்ளடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பட்டிருக்காவிடின், ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து அவர்கள் பின்வாங்குவதற்கான அறிகுறியாகவே அதனைக் கருதவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான மூன்று நாள் அரசமுறை விஜயத்தை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) புதுடில்லியை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு  திங்கட்கிழமை (16) நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, ‘தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என நம்புகிறோம். அதேவேளை அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதன் ஊடாக இவ்விடயத்தில் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இலங்கை அரசாங்கம் காண்பிக்கவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துக் கருத்துரைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல் என்பன தொடர்பில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தலை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி பிரதமர் மோடி எதனையும் குறிப்பிடவில்லை என சிலர் அதிருப்தி வெளியிடுவதைக் காணமுடிவதாக சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் உள்வாங்கப்பட்டிருப்பதன் காரணமாக அந்த அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகையில் அதில் 13 ஆவது திருத்தமும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை இந்தியாவும், இலங்கையும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள், 13 ஆவது திருத்தம், மாகாணசபைத்தேர்தல்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றி எதுவும் கூறப்படவில்லை. இதுபற்றி வினவியபோது, அவற்றை உள்ளடக்கிய கூட்டறிக்கையை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பட்டிருக்காவிடின், ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து அவர்கள் பின்வாங்குவதற்கான அறிகுறியாகவே அதனைக் கருதவேண்டியிருக்கும் என்றும் சுதந்திரம் தெரிவித்தார்.