கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பலியான வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரான ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக செய்தி தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.பாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வால்பாறை டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது கேவியட் மனு தாக்கல் செய்திருந்த அதிமுக இன்பதுரை தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், பாமக பாலு தரப்பில் வழக்கறிஞர் தனஞ்செயன், பாஜக மோகன்தாஸ் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் ஆஜராகி, தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து வாதிட்டனர். அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே முடித்துவிட்டது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என்றார்.
அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிப்பதால் தமிழக அரசுக்கு என்ன ஆட்சேபனை இருக்கிறது? உங்களது விசாரணையில் திருப்தி இல்லை என்பதால்தான் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.