தமிழகமும், ஒரே நாடு ஒரே தேர்தலும்: அண்ணாமலையின் ‘உதாரண’ விளக்கம்

25 0

ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை ஜனநாயக முறைப்படி கொண்டுவரப்பட்டுள்ளது என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தை உதாரணமாக வைத்து இந்த தேர்தல் நடைமுறையை விளக்கினார்.

இது குறித்து சென்னை – தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “1971-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டின்படி 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதன் பின்னர் அண்டை நாட்டில் இருந்து மக்கள் வந்தததால் சில பிரச்சினைகள் உருவான சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆண்டு காலம் அதிகரிக்க மாட்டோம் என அப்போதைய அரசு அறிவித்தது.

2001-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இது மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 2026-ம் ஆண்டுடன் அரசின் அறிவிப்பு நிறைவடைகிறது. இதையொட்டி, நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எடுத்துக்காட்டாக வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் வரவிருக்கிறது. அதில் தேர்வாகும் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். இதைத் தொடர்ந்து 2031-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பொறுப்பேற்கும் ஆட்சி, 2034 வரை மட்டுமே இருக்கும். அதாவது 2034-ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகும்.

இதற்கிடையே, ஆட்சி கலைக்கப்பட்டால் 5 ஆண்டுகள் இடைவெளியை நிரப்பும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமையும். இதன் மூலம் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு தொந்தரவில்லை. யாருக்கும் எதிராகவும் கொண்டு வரப்படவில்லை. இதை அரசியல் கட்சியினர் தவறாக புரிந்துள்ளனர், திரித்து பேசுகின்றனர்.

1951, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தான் நடைபெற்றது. அதன் பிறகு சில ஆட்சிகளை காங்கிரஸ் கலைத்ததால் தான் தேர்தல் நேரமும், காலமும் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வளர்ச்சி அரசியல் உருவாகும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்துக்கு மக்களின் வரவேற்பும் உள்ளது.

இது ஜனநாயக முறைப்படி கொண்டு வரப்பட்டுள்ளது. இத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிகிறது. அப்படியானால் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடும். எனவே, மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்கும் என நம்புகிறேன். இது எந்த விதத்தில் மாநில உரிமையை பறிக்கிறது என்பதை கனிமொழி எம்.பி., சொல்ல வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரம் வாங்குவது என்பது ஒரே ஒரு முறை தான். ஆனால், ஆண்டுக்கு 6 தேர்தலுக்கான செலவு, 3 மாத தேர்தல் நடத்தை விதி, பிரச்சாரம் போன்றவற்றை டி.ஆர்.பாலு எம்.பி. கருத்தில் கொள்ள வேண்டும். மாநிலம், மத்தியில் யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவுடனான கூட்டணி விவகாரத்தில் நேரமும் காலமும் இருக்கிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.