விடுதலை புலிகளின் கொள்கையுடைய புலம்பெயர் அமைப்புக்களின் நோக்கங்களுக்கு அமைய முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்க வேண்டாம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக எவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பளிக்க முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கேள்வியெழுப்பினார்.
பாதுகாப்பு தரப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பளிப்பதற்கு வழங்கப்பட்டார்களே தவிர அவரது தென்னந்தோப்பில் வேலை செய்வதற்கல்ல, என ஆளும் தரப்பினர் செனரத் குறிப்பிட்டதை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவுக்கும், ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்குமிடையில் கடும் தர்க்கம் நிலவியது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக,
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபைக்கு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கி 60 பொலிஸாரை மாத்திரம் பாதுகாப்புக்கு அமர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறைக் கைதி ஒருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது பாதுகாப்புக்கு பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்காக வழங்கப்படும் போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு முழுமையாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பளிப்பதால் 30 கோடி ரூபா செலவழிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பை நீக்கினால் இந்த நிதி பிற வழியில் செலவாகாதா, ஆகவே எந்த அடிப்படையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுங்கள் என்றார்.
இதன்போது எழுந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு மாத்திரம் குறைக்கப்படவில்லை என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய டி.வி. சானக. விடுதலை புலிகள் அமைப்பினர், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆகியோரின் விருப்பத்துக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்க வேண்டாம். மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பையும், ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பையும் எவ்வாறு ஒன்றாக மதிப்பிட்டீர்கள் என கேள்வியெழுப்பினார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் செனவிரத்ன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. இருப்பினும் அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட பொலிஸாரும், கடற்படையினரும் அவரது தென்னை தோப்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் தென்னந்தோப்பில் பணிக்கு அமர்த்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் தொடர்பில் டி.வி சானகவுக்கு தெளிவாக குறிப்பிட முடியும் என்றார்.