போலியான குற்றச்சாட்டை நளின் பண்டார வாபஸ் பெற வேண்டும்

14 0

கல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு அமைய கைது இடம்பெற்றதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்ட பொய்யான கருத்தை அவர் மீளப் பெற வேண்டும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைதுகள் இடம்பெறவில்லையாயின் அதனை வரவேற்பேன். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூற்றை ஆராய்ந்ததன் பின்னர் நாளை குறிப்பிட்ட கருத்தை மீளப்பெறுவது குறித்து குறிப்பிடுகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது.

போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதலை நடத்தி ,வன்முறையாக செயற்பட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் பொதுச்சட்டத்தின் பிரகாரமே கைது செய்யபட்டார்கள். எவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. என்றார்.

இதன் போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து குறிப்பிடும் கருத்துக்களை பொறுப்புடன் தெரிவிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் எளிமையான முறையில் பயன்படுத்துகிறது என்ற நிலைப்பாட்டை சர்வதேச மட்டத்தில் தோற்றுவிக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்ட கருத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துள்ளார். ஆகவே பொய்யான கருத்தை எதிரணியின் உறுப்பினர் வாபஸ் பெற வேண்டும் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார, நான் பொய்யுரைக்கவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கூற்றை ஆராய்ந்து இன்று பதிலளிக்கிறேன் என்றார்.