சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி உதவி குறித்து செயலியின் மூலமாக விவாதம் நடத்த நாணய நிதியம் ஒப்புக்கொண்ட போதிலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் பெரும் தொகையை செலவிட்டு அமெரிக்கா – வொஷிங்டனுக்கு சென்றது ஏன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்குபற்றிய அலுவலர்களின் எண்ணிக்கை இவர்களின் பயணத்திற்காக செலவிடப்பட்ட தொகை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சாமர சம்பத் கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த பதில் நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,
வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நான்கு அதிகாரிகளும் மத்திய வங்கியின் ஐந்து அதிகாரிகளும் கலந்துகொண்டனர் அதனைத் தொடர்ந்து வொஷிங்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கான தீர்மானம் அரசாங்கம் மற்றும் ஐ.எம்.எப். இடையே ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
கலந்துரையாடல்களின் சிக்கலான தன்மை,சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் நடத்த திட்டமிடப்பட்ட கலந்துரையாடல்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக வொஷிங்டன் கலந்துரையாடலில் பங்கேற்க அரசாங்கம் தீர்மானித்தது.
கலந்துரையாடலின் ஒரு பகுதியை வொஷிங்டனில் நடத்த சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் ஒப்புக்கொண்டன மற்றைய பாதி கலந்துரையாடல்களுக்கு ஐ.எம்.எப். குழு இலங்கைக்கு வர ஒப்புக்கொண்டது.
அதிகாரிகளின் விமான செலவுக்காக 7.05 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. 38587 டொலர்கள் பயண செலவுக்கு செலவிடப்பட்டது. நிதி அமைச்சின் அதிகாரிகள் விமானத்தில் வணிக வகுப்பில் பயணிக்கவில்லை என்றார்.