சென்னை அண்ணாசாலையில் ரூ.5.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள் உட்பட 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. பட்டு மற்றும் பருத்தி ரக வகைகளின் பாரம்பரிய மற்றும் நாகரிக சமகால வடிவமைப்புகளைக் கொண்டு சிறந்த கைத்தறி ரகங்களை வணிகப்படுத்தும் நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் விளங்குகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைக் காலங்களில் புதிய வடிவமைப்பு ரகங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் மனங்களை எப்போதும் கவர்ந்து வருகிறது.
இதற்கிடையில், கோ-ஆப்டெக்ஸின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், சென்னை அண்ணாசாலையில் கோ-ஆப்டெக்ஸ் கோலம் விற்பனை நிலையம் புதியதாக கட்டப்பட்டது. இந்த விற்பனை நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். மேலும், முதல் விற்பனை மற்றும் சிறப்பு விற்பனையை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மையர் பிரியா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறியதாவது: “சென்னை அண்ணாசாலையில் ஒமந்தூரார் மருத்துவமனை எதிரில், ரூ.5.60 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் கோ-ஆப்டெக்ஸ் கோலம் விற்பனை நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதி மற்றும் மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்தளத்தில் பட்டு மற்றும் பருத்தி சேலைகள், ஏற்றுமதி ரகங்கள், வேட்டிகள், துண்டுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
2-வது தளத்தில் பிற மாநிலங்களின் கைத்தறி துணி வகைகள் இடம்பெற்றுள்ளன. 3,4-வது தளங்களில் கோ-ஆப்டெக்ஸ் அலுவலகம் செயல்பட உள்ளது. கோ ஆப்டெக்ஸின் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையும் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் ரூ.50 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜன.31-ம் தேதி வரை அனைத்து பட்டு மற்றும் பருத்தி துணிகளுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.” என்று அவர்கள் கூறினர்.