சாம்சங் நிறுவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை துறை ரீதியான இடமாற்றங்கள் செய்து, அவர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி சிஐடியூ தொழிற் சங்கத்தினர் வரும் 19-ம் தேதி நிறுவன வளாகத்துக்குள் உண்ணாவிரதப் போராட்த்தில் ஈடுபட உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை 1000-க்கும் மேற்பட்டோர் கடந்த செப்டம்பர் மாதம் ஊதிய உயர்வு, தொழிற் சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 30 நாட்களுக்கும் மேலாக நீடித்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த, பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு அக்டோபர் 14-ம் தேதி, வழக்கம் போல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
போராட்டத்தில் இருந்து பணிக்கு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஆலைக்கு உள்ளே முந்தைய பணி வழங்கமால் வேறு வேறு பிரிவுக்கு மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.சிஐடியூ தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோருக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். நிர்வாகம் உருவாக்கியுள்ள தொழிற்சங்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக வரும் 19-ம் தேதி தொழிற் சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை சிஐடியூ தொழிற் சங்கம் சார்பில் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து சிஐடியூ மாநிலச் செயலர் முத்துக்குமாரிடம் கேட்டபோது அவர், “போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நேரடியாக மிரட்டும் நடவடிக்கையில் நிர்வாகத்தினர் இறங்கியுள்ளனர். அவர்களை வேலை செய்த பிரிவில் பணி செய்யவிடாமல் வேறு பிரிவுக்கு மாற்றுவது, மிரட்டல் விடுத்ததாக நோட்டீஸ் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே வரும் 19-ம் தேதி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிப்போம்.” என்றார்.