நாட்டை உலுக்குகிற முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக-வினர் அனுமதி மறுத்ததை கண்டித்து, நாளை (டிச.18) காலை 10 மணிக்கு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் சார்பாக, அதானி உள்ளிட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரத்தை அடக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்க்காதது குறித்தும் விவாதிப்பதற்காக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உரிய விதிப்படி அனுமதி கோரப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
நாட்டை உலுக்குகிற முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியினர் அனுமதி மறுத்ததை கண்டித்து, நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை (டிச.18) காலை 10 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏன் ஏற்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, அதானி உள்ளிட்ட 8 பேர் இணைந்து ரூபாய் 2000 கோடிக்கு மேலாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து சூரிய ஒளி மின் திட்டங்களை பெற்றிருப்பதை ஆதாரத்தோடு அறிக்கையாக வெளியிட்டது. இத்திட்டங்களின் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர், அதாவது, இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பில் ரூபாய் 17 ஆயிரம் கோடி கொள்ளை லாபம் ஈட்டக் கூடிய அளவுக்கு வாய்ப்புகள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் அதானி உள்ளிட்டோரை கைது செய்ய அமெரிக்கநீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது. இதைவிட இந்தியாவிற்கு வேறு அவமானம் இருக்க முடியாது.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில், சட்ட விரோதமாக விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலை திட்டங்கள், மின்உற்பத்தி மற்றும் விநியோக உரிமைகள் ஆகியவை அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால், அதானிக்கு ஏற்பட்ட ஆதாயத்தால் 2014-ல் ரூபாய் 41 ஆயிரத்து 890 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு 2023-ல் ரூபாய் 8 லட்சத்து 45 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது ஏறத்தாழ 2029 சதவிகித உயர்வாகும். உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 2014-ல் 609-வது இடத்தில் இருந்த அதானி, கடந்த 2023-ல் 13-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
அதானியின் இத்தகைய உயர்வுக்கு மோடியின் சட்டவிரோத ஒத்துழைப்பு தான் காரணமாகும். இதன்மூலம் அதானிக்கு ஆதரவாக செயல்பட்டதை ஆதாரத்தோடு நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன்? நீதித்துறை, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் போன்ற அமெரிக்க அரசு அமைப்புகளால் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதானியை காப்பாற்ற பிரதமர் மோடி முயல்வதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டிய ஜனநாயக கடமையின் காரணமாகத் தான் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது.
மேலும், வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள இயற்கை வளங்கள் நிறைந்த அழகிய மாநிலமாக இருந்த மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி கலவரம் வெடித்தது. மலைப்பகுதிகளில் வாழ்கிற பழங்குடியினத்தை சேர்ந்த குக்கி மக்களின் உரிமைகளை பறிக்கிற வகையில், சமவெளியில் வாழ்கிற மெய்தி சமூக மக்களுக்கு பழங்குடியினர் தகுதி வழங்க பாஜக முயற்சி செய்ததன் விளைவாக அங்கே கலவரம் வெடித்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிற கலவரத்தில் 220 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்பாவி குக்கி சமூகத்தைச் சார்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். மணிப்பூர் கலவரம் குறித்து, உலக நாடுகளில் உள்ள பல ஜனநாயக அமைப்புகள் வன்மையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
ஆனால், மணிப்பூர் மாநிலத்தை ஆட்சி செய்கிற பாஜக முதல்வர் என். பிரேன்சிங், குக்கி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியதை இண்டியா கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கோரினார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக இனக் கலவரத்தினால் மணிப்பூர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிற நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்க பிரதமர் மோடி முன்வராததை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முயற்சிகள் மேற்கொண்டன.
இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிற பிரதமர் மோடி, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ஏன் செல்லவில்லை என்று, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும், மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே-வும் இதுகுறித்து பேச முற்பட்ட போது, அனுமதி மறுக்கப்பட்டது. மோடியின் இத்தகைய அலட்சியப் போக்கின் காரணமாக இந்தியாவில் மணிப்பூர் மாநிலம் இருக்கிறதா என்கிற கேள்வி இன்றைக்கு எழுந்துள்ளது.
மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப அனுமதி மறுத்ததன் விளைவாக மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டு செல்கிற வகையில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி ஆட்சியின் சர்வாதிகாரத்தை முறியடிக்க முன்வர வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.