மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்ககோரி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கசிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பரித்திச்சேனை மங்கையர் கொத்தனி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு பேரணியையும் போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.
இதன்போது பரித்திச்சேனையிலிருந்து கவன ஈர்ப்பு பேரணியானது ஆரம்பமாகி தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் வரையில் சென்றது.
அங்குள்ள விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியிடம் பிரதேசத்தில் காணப்படும் சட்ட விரோத கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்க உதவுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் மகஜர் ஒன்றும் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை-வவுணதீவு பிரதான வீதியூடாக வந்து வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பரித்திச்சேனையில் அதிகரித்துவரும் கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்க கோரியும் பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இவ்வாறான நிலைமைகளை தடுக்ககோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது இலஞ்சம் வாங்காதே,போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாக்காதே,கசிப்பு பாவனையை தடுத்து நிறுத்து,போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்து போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் சந்தித்த போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
குறித்த பகுதியில் பொலிஸார் போதைப்பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் அதற்காக பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.
அதனை தொடர்ந்து பேரணியானது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக வருகைதந்து அங்கும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யோகராஜாவுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலந்துரையாடினார்கள்.
அவர் தெரிவித்த கருத்துக்கள்,
தமது பகுதிகளில் கசிப்பு உற்பத்தி,விற்பனை,போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு முறையான நடவடிக்கையெடுக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சமுர்த்தி,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்கள் கடமையாற்றும்போது அவர்கள் மூலமும் இவற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
என்பதுடன் அவற்றினை கட்டுப்படுத்த போதைப்பொருள் விற்பனை,கசிப்பு விற்பனை செய்யும் குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும்.
மின்சாரம்,குடிநீர் உட்பட அனைத்து அரச மானியங்களையும் இடைநிறுத்த பிரதேச செயலாளர் நடவடிக்கையெடுக்கவேண்டும் .
அதன்மூலம் தமது பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரிகள்,கசிப்பு வியாபாரிகளை நிறுத்தமுடியும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத கசிப்பு விற்பனை,போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு பொதுமக்களுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என்றார்.
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும் சிலர் இலஞ்சங்களைப்பெற்றுக்கொண்டு குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயற்பட்டதாகவும் முறையான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுக்காத காரணத்தினாலேயே சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையிலேயே வறுமையான பிரதேச செயலகப்பிரிவாக மண்முனை மேற்கு பிரதேச செயலகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோத கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனையினால் பாரிய பிரச்சினைகளும் எழுவதுடன் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும் ஏற்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரதிநிதிகளாக இணைப்பாளர் டினேஸ்,முன்னாள் மட்டக்கள்பபு மாநகரசபை உறுப்பினர் கௌரி ஆகியோர் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினருக்கான மகஜர் பரித்திச்சேனை மங்கையர் கொத்தனி அமைப்பினால் இணைப்பாளர் மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.