சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும். இம்மாதத்துக்குள் இந்தியாவில் இருந்து 60 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும்.
பண்டிகை காலத்தில் ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி பகுதியில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
திட்டமிட்ட வகையில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. அரிசி தட்டுப்பாடு ஊடாக அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு ஒருதரப்பினர் முயற்சி செய்தார்கள். பிரதான அரிசி உற்பத்தியாளர்களுக்கு அடிபணியாமல் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு இம்மாதம் 20 ஆம் திகதி வரை தனியார் துறையினர் அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் 75 ஆயிரம் கிலோகிராம் அரிசி பாவனைக்கு உகந்ததல்ல என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவை மீள் ஏற்றுமதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊடாக 25 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் கிலோகிராம் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 5200 மெற்றிக் தொன் அரிசி நேற்று நாட்டை வந்தடைந்தது. இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் இருந்து இந்தியாவில் இருந்து 60 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். எந்த உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது. நிர்ணய விலையை காட்டிலும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர் அதிகார சபை ஊடாக தொடர்ச்சியான சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.