சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைக்கும் நபருக்கு ஆதரவு வழங்குவோம். போலியான கல்வித் தகைமையை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி செயலாளர் டொனால்ட் லூ அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி உட்பட உயர்மட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இலங்கையின் நிதி மோசடி செய்யப்பட்டு அவை பிற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்குமாயின் அந்த நிதியை நாட்டுக்கு கொண்டு வர முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக டொனால்ட் லூ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷர்கள் அரச நிதியை மோசடி செய்து அவற்றை உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
ஆகவே தற்போது நல்லதொரு வாய்ப்பு ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவின் உதவியை பெற்று வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள நிதியை நாட்டுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
சபாநாயகரின் விவகாரத்துடன் அரசாங்கத்தின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. போலி கல்வித் தகைமையுடன் கற்றோர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தேசிய மக்கள் சக்தியினர் தமது கல்வித் தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சபாநாயகர் பதவிக்கு முன்மொழிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த நபரை எதிர்க்கட்சி முன்மொழிந்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
சிறந்த அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் மீது சிறிதளவேனும் நம்பிக்கை கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இணையாக குறைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை சடுதியாக குறைத்துள்ளமை முற்றிலும் தவறானது என்றார்.