அரிசி விலை விவகாரத்தில் அரசாங்கமும் அரிசி ஆலை உரிமையாளர்களுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நுகர்வோரும் விவசாயிகளும் தோல்வியடைந்துள்ளனர். சாதாரண மக்களின் தேங்காய் சம்பளுடனான சோறு என்ற உணவு கூட இந்த அரசாங்கத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரிசி விலை விவகாரத்தில் அரசாங்கமும் அரிசி ஆலை உரிமையாளர்களுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நுகர்வோரும் விவசாயிகளும் தோல்வியடைந்துள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது, அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எதற்கு என ஜே.வி.பி.யினர் கேள்வியெழுப்பினர். ஆனால் இன்று அவர்கள் அதனையே செய்கின்றனர்.
அதேவேளை இன்று குரங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எம்மால் என்ன செய்ய முடியும் என்றும், மழை பெய்து பயிர் செய்கை பாதிக்கப்பட்டால் அதற்கும் அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றனர். இவ்வாறு பதிலளிப்பதென்றால் அரசாங்கம் எதற்கு என மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.
120 ரூபாவாகக் காணப்பட்ட தேங்காய் விலை இன்று 220 ரூபாவை விட உயர்வடைந்துள்ளது. அரிசி மற்றும் தேங்காய் விலையை அதிகரித்தன் ஊடாக சாதாரண மக்களின் சோறும், தேங்காய் சம்பலும் என்ற மிக சாதாரணமான உணவு கூட கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதாகக் கூறியவர்களுக்கு இன்று அந்த நாடுகளில் கற்றதற்கான பட்டத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.