பாராளுமன்ற இணையத்தலத்தில் எனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்ற பதவி பொறிக்கப்பட்டிருந்த சம்பவம் தவறுதலாக இடம்பெற்றதா அல்லது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
அதனால் இதுதொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு கோரி, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தேன் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற இணையத்தளத்தில் எனது பெயர் கலாநிதி ஹர்ஷன நாணயக்கார என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனது முறைப்பாட்டுக்கு பின்னர் கலாநிதி என்ற பதவி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
எனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்ற பதவி தவறுதலாக இடம்பெற்றதொன்று என பாராளுமன்ற செயலாளர் காரியாலயம் என்னிடம் மன்னிப்பு கேட்டும் அதனால் எனக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருத்தம் தெரிவித்தும் கடிதம் அனுப்பி இருந்தது. ஊடகங்களிலும் அது பிரசுரமாகி இருந்தது.
என்றாலும் ஊடகங்களில் இதுதொடர்பாக எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்து.
நான் கடந்த 25 வருடங்களாக சட்டத்தரணியாக நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் எனது பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டத்தை பயன்படுத்தியதில்லை.
எனது சுயவிபரக்கோவையிலும் கலாநிதி என்ற சொல் இல்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு இது இணையத்தளத்துக்கு வந்தது என்ற சந்தேகம் எழுகிறது. எனது முறைப்பாட்டுக்கு அமைய அது நீக்கப்பட்டது உண்மை.
என்றாலும் எதுவும் சும்மா இடம்பெறுவதில்லை. இந்த சம்பவம் இடம்பெற்றமைக்கும் அது இடம்பெறும்போது நாட்டில் ஏற்பட்டிருந்த சர்ச்சை என்பவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கையில் யாருக்கு வேண்டுமானாலும் சந்தேகம் எழுகிறது.
யாராவது எனது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது எனது அரசியல் நடவடிக்கையின் நம்பகத்தன்மையை வீழ்த்துவதற்கு போலி தரவுகளை உள்ளடக்கி இருக்கிறார்களா என்ற நியாயமான சந்தேகம் யாருக்கு வேண்டுமானாலும் எழுகிறது.
அதனால் குற்றப்புலனாய்வு பிரிவு இதுதொடர்பாக பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் யாராவது தவறு செய்திருந்தால் அவருக்கு முறையான நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு ஒன்றை தெரிவித்தேன்.
மேலும் இந்த சம்பவத்தால் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் எனது நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்துக்காக சிவில் வழக்கொன்றை தொடுத்து நட்டஈடு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எனது சட்டத்தரணிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறேன்.
இந்த நாட்டை கடந்த 70 வருடங்களாக ஆட்சி செய்த ராஜபக்ஷ்வினர், ரணில் போன்ற போன்ற மோசடிகாரர்களை விரட்டினோம்.இவர்களை விரட்டியதற்கு பின்னர் இதுதான் மறு புரட்சியின் ஆரம்பம்.
அவர்களுக்கு எமக்கு எதிராக செயற்பட முடியாது என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். உதாரணமாக நாயை விரட்டினாலும் நாயுடன் இருக்கும் உன்னி செல்வதில்லை.
அது கண்ணுக்கு தெரியாத அளவு சிறியது. சந்தர்ப்பவாதி. அதனால் இந்த உன்னிகளை அரச பொறிமுறையில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றார்.