எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராேஹின குமாரி விஜேரத்னவின் பெயரை பிரேரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடி, இதுதொடர்பாக ஆராந்தபோதே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து சபாநாயகர் பதவியை அசோக்க ரன்வல இராஜினாமா செய்ததன் மூலம் சபாநாயகர் பதவிக்கான வெற்றிடம் பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகின்றபோது, புதிய சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறும். இதன்போது புதிய சபாநாயகர் ஒருவரை பிரேரிக்கும்போது எதிர்க்கட்சியில் இருந்தும் ஒருவரை பிரேரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் ராேஹினி குமாரி விஜேரத்னவின் பெயரை பிரேரிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அதேவேளை, சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் பொருத்தமான உறுப்பினர் ஒருவரை பிரேரித்தால் அதற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆளும் கட்சியில் இருந்து புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரேரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.