தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 14-12-2024 சனிக்கிழமை பொண்டிப் பிரதேசத்தில் பிற்பகல் 15.00 மணிக்கு நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பொண்டி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத்தலைவர் அவர்கள் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப்படத்துக்கான ஈகைச்சுடரினை 01-02.1998 அன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் நிலவன் அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்து, மலர் வணக்கம் செலுத்தினார்.
தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 03-07-1988 அன்று முல்லைத்தீவு, விசுவமடு, 12 ஆம் கட்டைச் சந்தியில் இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் மரியாவின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
பொண்டி தமிழ்ச் சோலை, சென்டனி தமிழ்ச் சோலை, நுவசி சாம் தமிழ்ச் சோலை ஆகிய பள்ளி மாணவர்களின் எழுச்சி நடனம் மற்றும் கவிதை, பேச்சு என்பவற்றுடன் தமிழர் கலை பண்பாட்டுக் கழகக் கலைஞர்களின் பாடல்களும் இடம்பெற்றன. நினைவுரையினை தேசத்தின் குரல் பாலா அண்ணன் நினைவு சுமந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு.செங்கதிர் அவர்கள் ஆற்றியிருந்தார். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.