”நாமல் மோசடி செய்து பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன”

25 0

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு 11 வருடங்களுக்கு முன்னர் சட்டப் பரீட்சையின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

மோசடி, ஊழல் மற்றும் விரயத்திறகு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கமந்த துஷார, ராஜபக்ச மோசடி செய்து சட்டப் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார்.

ராஜபக்சே தனது சட்டப் பரீட்சைக்கு அமரும் போது தனியறையில் இரண்டு சட்டத்தரணிகள் அவருக்கு உதவியதாக துஷார மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை சிஐடி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் மோசடியானது என்பது நிரூபிக்கப்பட்டால், பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று துஷார கோரினார்.

இதற்கிடையில், சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைகளால் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கல்வித் தகுதிக்கான ஆதாரங்களை வழங்க முடியாவிட்டால், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.